கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-28 உடன் கொள்ளுதல்

மனுஷ்ய புத்திரன் அவர்களுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது "நாட்டார் கதை வெளிகளில் பேய்க்கதைகள் என்று தனியே உண்டு. அவைகளையும் சேகரியுங்களேன்" என்று சொன்னார்.

 பேய்க்கதைகளின் வெளி மிகவும் சுவாரஸ்யமானவை. பேய்க்கதைகள் கட்டற்றுச் சுழலும் தன்மை கொண்டவை. ஒருவித நம்பிக்கைப் பிடிமானத்தில் இயங்கும் பேய்க்கதைகள் பலவற்றை நானும் கதைசொல்லிகள் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 பேய்க் கதைகளை முன்இரவில் கேட்டுவிட்டு, இரவு முழுவதும் தூக்கமின்றிப் புரளும் சிறுவர்களின் அனுபவம் அலாதியானது. திகிலும் மர்மமும் நிறைந்த இத்தகைய கதைகளை எல்லாம் தொகுத்து தனி ஒரு நூலே கொண்டு வரலாம்.

 உயிர்மை வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ள ’மண்ணின் கதைகள், மக்களின் கதைகள்’ என்ற என் நூலில் சில பேய்க்கதைகளைப் பதிவு செய்துள்ளேன்.

இந்த வாரம் உயிரோசையின் வாசகர்களுக்கு ஒரு பேய்க்கதையைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

 கதைக்குள் செல்லும்முன் கதையின் தலைப்புப்பற்றிச் சில சொற்களைச் சொல்ல விரும்புகிறேன்.

 குற்றாலத்தில் அருவிக் கரையில் உள்ள கோயிலில், குற்றால நாதருடன், செண்பகக் குழல் வாய்மொழி அம்மை உடனுறைகின்றார்! மேலே கண்ட வாக்கியத்தில் உள்ள ’உடனுறைதல்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ’உடன் வாழ்தல்’ என்ற பொருளில் அந்த வார்த்தை, அவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 பேய்களின் உலகத்தில் "உடன்கொள்ளுதல்" என்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்று நடைமுறையில் உள்ளது.

 ஒரு ஆண் பேய், அழகான கன்னிப் பெண் ஒருத்தியைக் காதலிக்கும். தனியே மத்தியான நேரத்தில் காடு கரைகளுக்கு அழகான கன்னிப்பெண் செல்லும்போது, ஆண் பேய், அக்கன்னிப் பெண்ணை வழிமறித்து அவளிடம் பேசும். அவளும் சம்மதித்தால், அப்பேய் அக்கன்னிப் பெண்ணின் உடம்பில் புகுந்து கொள்ளும்.

அக்கன்னிப் பெண்ணுடன், அந்த ஆண் பேய், தான் விரும்புகின்ற காலம் வரை வாழும். அப்பெண்ணை பேய் ஆட்கொண்ட விபரம் வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அக்கன்னிப் பெண்ணுக்கு மட்டும் தெரியும்.

 அந்தப் பெண்ணுடன் வாழும் பேய், அப்பெண்ணுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அப்பெண் தனியே இருக்கும் போது, வெளிப்பட்டு, மாய உருவம் கொண்டு அவளுடன் பேசி மகிழும்.

 அந்த ஆண் பேய், அக்கன்னிப் பெண்ணுடன் கொஞ்சி விளையாடும். சிலநேரம் அப்பெண்ணிற்கு முத்தமும் கொடுக்கும். இருவரும் காதலன் காதலியாகப் பாவித்துச் சிரித்துப் பேசி, கொஞ்சிக் குலாவி, காதல் நாடகத்தை நடத்துவார்கள். ஆண் பேயும், அக்கன்னிப் பெண்ணும், விரும்பினால் உடல் உறவும் கொள்வார்கள்.

 இப்படி ஒரு கன்னிப் பெண்ணின் உடம்பிற்குள் ஆண் பேய் ஒன்று புகுந்து வாழ்வதை "உடன்கொள்ளுதல்" என்று கதைசொல்லிகள் சொல்கிறார்கள். கன்னிப்பெண்ணை உடன்கொள்ளும் பேய், அவளின் எதார்த்தமான, சராசரி வாழ்க்கைக்கு எந்த இடையூறும் செய்யாது. ‘உடன்கொள்ளுதல்’ என்ற வார்த்தைக்கான விளக்கம் இந்த அளவில் போதும் என்று நினைக்கிறேன். இனி கதைக்குள் செல்வோமா....

 ஒரு ஊர்ல ஒரு கன்னிப்பெண் இருந்தாள். அவள் பார்க்க ரொம்ப லெட்சணமா அழகா இருந்தாள். அவள் ஒருநாள் சுடுகாட்டு ஓரமா இருந்த ஆலமரம் ஒன்றில் சுள்ளி (காய்ந்த சிறு விறகுகள்) பெறக்கப் போயிருந்தாள்.

 அந்த ஆலமரத்தின் கொப்பு ஒன்றில் குடியிருந்த ஆண் பேய் ஒன்று அந்த அழகான கன்னிப் பெண்ணைப் பார்த்து மோகம் கொண்டது. ஆண் பேய், சாகும் முன் கன்னி கழியாத இளவட்டப் பையனாக இருந்தது. எனவே அந்தக் கன்னி கழியாத (பெண் பிள்ளைகளில் கன்னிகழியாத - பிள்ளைகள் இருப்பது போலவே, இளவட்ட ஆண்களிலும் கன்னி கழியாத பையன்கள் உண்டு) பையன் செத்து ஆவியான (பேயான) பின்னும், அழகான கன்னிப் பெண்ணைத் தேடி அலைந்தான்(தது!).

 சுடுகாட்டின் அருகே சுள்ளி பெறக்க வந்த கன்னிப் பெண்ணைக் கண்டதும், ஆண்பேய், அழகான ஒரு இளவட்டப் பையன் போல் ரூபம் (வடிவம்) கொண்டு அவள்முன் தோன்றியது.

 அத்தான காட்டில் வந்து நிற்கும் அழகான அந்த வாலிபனைக் கண்டு, அவன் (பேய் என்று தெரியாமல்) அழகில் மயங்கினாள் அப்பெண்.

 அழகான வாலிபன் போன்ற ரூபத்தில் நிற்கும் பேயைப் பார்த்து அந்தக் கன்னிப் பெண் தன் மனதைப் பறி கொடுத்தாள். வாழ்ந்தால் இத்தகைய அழகான வாலிபனுடன்தான் வாழ வேண்டும் என்று நினைத்தாள்.

 எனவே அந்த இளவட்டப் பேய் அவளுள் புகுந்து கொண்டது. அதன் பிறகுதான் அவளுக்குப் புரிந்தது, அத்தான நடுக்காட்டில் நம் முன் வந்து நின்றது அழகான வாலிபன் அல்ல ஆண்பேய் என்பது.

 அவளை ‘உடன்கொண்ட’ பேய், அவளுடனேயே அவள் வீட்டிற்கும் சென்றது. ஆலமரத்தடியில் கிடந்த சுள்ளி விறகுகளை எல்லாம் பேய், (அவளுள் புகுந்த பேய்) ஒரு நிமிசத்தில் பெறக்கி கெட்டாகக்கெட்டி வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டது.

 விறகுக் கெட்டு வீட்டிற்கு வந்த விதம் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் அவள் உள்ளுறைந்த பேய் லேசாகச் செய்து முடித்தது.

 இரவில் அவள்முன் தோன்றி அவள் அருகில் உக்கார்ந்து கொண்டு அவளைக் கொஞ்சி விளையாடியது. இந்த சுகமும் அவளுக்குத் தேவையாக இருந்தது. இப்படியாக அந்த ஆண்பேய் அவளுக்குத் தேவையான சுகத்தைக் கொடுத்துக்கொண்டு, அவள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் தானே செய்து கொண்டும் அவளை ‘உடன்கொண்டு’ வாழ்ந்து கொண்டிருந்தது.

 இப்படியாக இருக்கும்போது அந்தக் கன்னிப் பெண்ணிற்கு அவள் ஆயும் அப்பனும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

 அவளுள் உடன் வாழும் பேய் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விசயத்தைக் கேள்விப்பட்டுக் கோபம் கொண்டது. அன்று இரவு நடுச்சாமவேளையில், அப்பேய் அவள் முன் தோன்றி, "நான் இனிமேல் யாரையும் உன்னுடன் வாழச் சம்மதிக்கமாட்டேன். உனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளையை இப்போதே போய் ஒரே அடியாய் அடித்துக் கொன்றுவிடுவேன். அவன் ரெத்தம் கக்கிச் செத்துவிடுவான்" என்று மிரட்டியது.

அவள், தன் காதலனான பேயைப் பார்த்து, "நீ, என் மேல் உண்மையான நேசம் கொண்டிருந்தால் எனக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளையைக் கொல்லக்கூடாது" என்றாள்.

 பேய் அவளிடம், "அப்படியானால், நீ என்றைக்கும் கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்துக்கோ" என்றது.


"அதெப்படி முடியும்? எனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றால் என் வீட்டார் எல்லோரும் ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாய்? என்று கேட்பார்கள். நான் அவர்களுடன், நீ உடன்கொண்டிருக்கிற விசயத்தைச் சொன்னா, என் வீட்டார் நாளையே, பேயோட்டியைக் கொண்டுவந்து உன்னை, என்னிடம் இருந்து விரட்டிவிடுவார்கள்.

 நீயும் நானும் எப்போதும் போல் காதலித்துக் கொண்டே இருக்கலாம் . நான் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் நீ என்னுள் இருந்து செய். உனக்குச் சுகம் தேவைப்படும்போது நீயும் என்னுடன் கூடிக் காதல் சுகத்தை அனுபவித்துக்கொள்ளலாம். ஆனால் எனக்குக் கல்யாணம் ஆன பிறகு நீ சற்று விலகியே இருக்கவேண்டும். என் புருசன் என்னோடு பேசும்போது நீ பேசக்கூடாது. அவர் என்னைக் கூடும்போது நீ என் கிட்ட வரக்கூடாது. நீ என்னை ’உடன்கொண்டு’ வாழ்வதும் ஒருத்தருக்கும் தெரியக்கூடாது" என்றாள்.

 அழகான பெண்மேல் தீராத காதல் கொண்ட அந்த ஆண்பேயும் "சரி" என்றது.

 அவள் குடும்பத்தினர் திட்டமிட்டபடி அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கட்டி வைத்தார்கள். அவளும் கட்டிய புருசனுடன் சந்தோசமாக வாழ்ந்தாள்.

 புருசன் காடுகரைக்குப் போனபிறகு பேயை நினைப்பாள். உடனே அந்தப் பேய் அவள் அருகில் வந்து அவள் ஏவிய வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, அவளுடன் சந்தோசம் கொண்டாடிக் கொண்டிருந்துவிட்டுப் போய்விடும்.

பேயைக் காதலிப்பதால், இந்தக் கள்ளக் காதல் விசயம் ஊர் உலகத்திற்கும் தெரியவில்லை. கட்டிய புருசனுக்கும் தெரியாமல், ஊர் உலகமும் அறியாமல் அந்தக் ’கைகாரி’ காலமெல்லாம், பேயுடன் கள்ளக் காதல் கொண்டு வாழ்ந்து வந்தாள் என்று கதையைச் சொல்லி முடித்தார், நெல்லை மாவட்டம் வீரசிகாமணி என்ற ஊரைச் சேர்ந்த செல்லமுத்து என்ற கதை சொல்லி.

No comments: