கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கடித இலக்கியம் -2 சுப்பிரமணிய ராஜுஇளசை அருணா அவர்களுக்கு

மறைந்த எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். திரு.இளசை அருணா அவர்களுக்கு எழுதிய கடிதம்

இது சென்னை
இருபத்தொன்பதின் இரவு

அன்பான..டியர்..

உங்க லெட்டர் கிடைச்சுது. உங்களுடைய அந்த முதல் கடிதம்.. ஒரு விஷயத்தை ஒப்புக்கணும். 'உங்கள் படைப்பை அனுப்பி வையுங்க' என்ற வரிகளை 'மிஸ்டேக்' பண்ணின்டு.. என் குப்பையில் கிடைச்ச ஒரு பேப்பரை என் போன கடிதத்தோட அனுப்பிவிட்டேன். ஒரு வேண்டுகோள். அதை முடிஞ்சா திருப்பி அனுப்பிடுங்கோ. உங்க ஊர்ப்பக்கம் எப்பவோ வந்ததா ஞாபகம். என் கடையை விரிக்கச் சொல்லுதீங்க.. லேசா ஒரு ஜன்னலைத் திறக்கிறேன். கவிதை எனக்குத் தொழில் அல்ல. வாழ்க்கை. நான் விழித்திருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு கவிதையைப் பார்த்துடுறேன். ஆனா.. பார்த்ததோடு சரி.. இன்னும் ஒன்னும் உருப்படியா செய்யலை. செய்வேன். ஊர்க் குருவி மாதிரி இருந்தேன். பருந்தாப் பறக்க நெனச்சேன். பறக்கவும் பறந்தேன். ரொம்ப தூரம் போனப்புறம்தான் தெரிஞ்சுது. நான் குருவிங்கறது. அது தெரிஞ்சபோது நான் தெளிஞ்சு இருந்தேன். தெளிவாயில்லாத சில சமயங்களும் வருது. இப்ப பழையபடியே குருவியாக முடியலை. உயர உயரப் பறந்து போய்க்கிட்டே இருக்கேன். இந்த பரங்கிமலை ஸ்டேஷனுக்குத் தென்புறம் சிறுமூச்சுவிடும் ஆதம்பாக்கத்துக்கு வந்து 15 வருஷம் ஆறது. என் தெருவில் நான் ஒரு அன்னியன். இவ்வளவு நாள் ஆகியும் இதோடு எனக்குப் பரிச்சயமில்லை.     உலகப் புகழ் கம்பெனியில் இப்போது அக்கவுண்டன்ட். மத்தியானத் தலைவலியில் வரவு செலவுக் கூட்டல் பண்ணமுடியாமல் தவிக்கும் உதவித் தலைமைக் கணக்காயன். மாலையில் பி.காம். மூன்றாவது வருஷத்தில் ஒரு மாணவன். ஞாயிறின் காலையில் படிக்கும் சாதாரணன். மாலையில் காதலன். அதிர்ஷ்டவசமாக இன்னும் கல்யாணம் ஆகலை. இருபத்துநாலுவருஷம் இந்த வருஷக் காலண்டரின் சில கிழிபட்ட தேதிகளும் என் அனுபவம். இந்த அனுபவத்தை எழுதி முடிக்கிறதுக்குள்ளேயே நாப்பத்திஎட்டு ஆயிடும் போலிருக்கு. பாப்பம். பாரதி பற்றி எழுதனும்னு ஆசை உண்டு. பாரதியின் சொல் சுத்தம் பத்தி ஒரு நா ராத்திரி 121/2 வரை பேசிக் கொண்டிருந்திருக்கேன். ஆனால் எழுதற அளவுக்கு எனக்கு என்ன தெரியும்னு ஒரு சிந்தனை ஓடுது. இப்ப எனக்கு ஒன்னுமே தெரியலைங்கிற ஞானம் வருகிறது. சில புத்தகங்களின் ஆங்கில வரிகளை மேயும்போது என்னிக்காவது ஒரு நா நல்லா எழுதுறதுக்காகத்தான் இப்ப எழுதி பயிற்சி பண்ணின்டிருக்கேன்னு நினைக்கிறேன். any how... இதையெல்லாம் விட வாழ்க்கை எனக்கு சுவாரஸ்யமா இருக்கு. தெருவை ஒரு நா அதிகாலைல பார்க்கும்போது ஏற்படும் ஒரு பரவசத்தை எனக்கு இதுவரை எந்தக் கவிதையும், கதையும் கொடுத்ததில்லை. இங்கே மெட்ராஸுக்கு        அங்கேருந்து உங்க நண்பர்கள் யாராவது வந்தா சொல்லுங்க. இந்த கொக்கின் சிறகை, காக்கையின் கருப்பாக்கி மகிழ ஒரு அஞ்சு லிட்டர் பேப்பர் வாங்கி அனுப்பறேன். 'பாரதி' பற்றிய என் கட்டுரையோ, கவிதையோ உங்களுக்கு வந்து சேர முயற்சிக்கிறேன்.. கார்டுல எழுதுறதைப் பத்தி ஆட்சேபனை இல்லை. ஆனா.. என்னோட நிறை நேரம் பேச அது போறாதே? வேற ஏதாவது விசேஷம் உண்டா? எழுதுங்களேன். வரட்டுமா?

யுவர்ஸ்,
சுப்ரமண்ய ராஜு                                                                        29.6.73

கடிதச் சேகரம்: கழனியூரன்

No comments: