கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-12 பாமரர் பாட்டில் பாலியல் சுவடுகள்

பாலியல் என்பதும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இலக்கியத்தில் பாலியல் பதிவுகள் இருப்பது இயல்புதான்.

கம்பன் பாலியல் செய்திகளைத் தன் காவியத்தில் காலையழகுடன் பதிவு செய்துள்ளான். கம்பன் பாடல்களில் உள்ள பாலியல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தனி நூல் ஒன்றை எழுதினார்கள்.

வள்ளுவர் தனது மூன்றாம் பாலைக் காமத்துப் பால் என்றே வடித்துக் கொடுத்தார்.

இப்படி மகாகவிகளின் படைப்புகளில் காணப்பட்ட பாலியல் சுவடுகள் பாமர மக்கள் பாடிய நாட்டுப் புறப் பாடல்களில் இல்லாமல் இருக்குமா?

இனி அத்தகைய சில பாடல்களை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

அவள் மாநிறமாக இருந்தாலும் பார்க்க லெட்சணமாக இருந்தாள். கட்டும்முட்டுமான தேகக் கட்டு அவளுக்கு.

மிஞ்சி, மிஞ்சிப் போனால் அப்போதைக்கு அவளுக்கு முப்பது வயதிருக்கும். கட்டிக் கொடுத்து அவளுக்கு ஒரு பிள்ளையும் இருந்தது. தலைப்பிள்ளை பிறந்து தகப்பனைத் தின்றுவிட்டது. இப்போது அவள் விதவை.

மறுமணம் செய்து கொள்ளலாம்தான். ஆனால் அதற்குத்தோதான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அவளோ ஏழை; அன்னாடம் காச்சி. வயிற்றுப் பாட்டிற்கு, காடு கரைகளுக்கு வேலைக்குப் போனால்தான் கஞ்சி காச்ச முடியும் என்ற நிலையில் இருந்தாள்.

பெத்த பிள்ளைக்கு ஆறுமாதம்தான் வயசாச்சி. பச்சப் பிள்ளையைத் தொட்டிலில் போட்டு, பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அருகிலுள்ள காடுகரைகளுக்கு வேலைக்குப் போவாள்.

வேலைக்குப் போகும் 'காடு' தொலைவாய் இருந்தால், பிள்ளையையும், தொட்டில் சேலையையும், தொட்டில் கயிற்றையும் கையோடு கொண்டு சென்று, வேலைத் தலத்தின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தொட்டிலைக் கட்டி அதில் பிள்ளையைப் போட்டுவிட்டு, தன் பாடு, ஜோலிகளைப் பார்ப்பாள்.

கருவமரத்துக் கொப்பில் காற்றில் தொட்டில் மெல்ல ஆடும். தொட்டிலில் கிடக்கும் பிள்ளைக்குப் பசி எடுத்தால், தொட்டிலை வளைத்துக் கொண்டு அழும்.

சற்றுத் தொலைவில் காட்டில் வேலை செய்யும் அத்தாயின் மார்புகளில் அமுதப்பால் ஊறிக் கனக்கும்.

தொட்டிலில் கிடக்கும் பிள்ளை அழுவதற்கும், தாயின் மார்புக் கூட்டில் தாய்ப்பால் ததும்பி வழிவதற்கும் சரியாக இருக்கும்.

காட்டின் உரிமையாளன் கையில் ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு, கங்காணம் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அனுபவஸ்தன்தான்.

அத்தோடு, அப்பெண், அவனுக்கு 'கொளுந்தியாள்' என்ற முறைகாரியாக வேறு இருந்தாள். ஆம்பளைத் துணை இல்லாதவள். சின்ன வயசிலேயே தாலியை அறுத்துக் கொண்டு இருப்பவள்.

ஆளும் பார்க்க கட்டுமுட்டுமாக இருக்கிறாள். தாய்ப்பால் கொடுப்பதால் அவள் நடந்து வரும்போது, அவளின் தனங்கள் ரெண்டும் மாராப்புச் சேலையை முண்டிக் கொண்டு ஆடுகின்றன.

அவள் கருவைக் கொப்புத் தொட்டிலில் கிடந்து வளைந்து, நெளிந்து அழும் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுப் பிள்ளையை 'அமர்த்து'வதற்காகக் கழனியில் இருந்து கரையேறி கருவை மரத்தை நோக்கி நடந்து செல்கிறாள். வேலைத் தலத்தில், வேலை செய்வதால் கட்டிய சேலையின் கீழ்தட்டு கரண்டைக் காலுக்கும் மூட்டுக்கும் நடுவில் கிடந்தது.

அவள் நடந்து, அவனைக் கடந்து செல்கிறாள், தலைகுனிந்தபடி, தன் மாராப்புச் சேலையைச் சரி செய்தபடி. அவளோ, அழுகிற பிள்ளையை அமர்த்தும் அவசரத்தில் வேகமாக நடக்கிறாள். அவனோ, அவளின் காலழகையும், குலுங்கும் மார்பழகையும் ரசிக்கிறான். ரசித்ததோடு நிற்கிறானா. . .கங்காணம் பார்ப்பவன், பாட்டுவேறு பாடுகிறான் இப்படி:

  'கோடாலிக் கொண்டை போட்டுக்
   குசியாகப் போற கண்ணே!
  மாராப்புக்குள்ளே குதிக்கிறது,
   மாங்கனியா?. . .தேங்கனியா. . . பெண்ணே'!
என்று.


கங்காணம் பார்க்கும் கழனியின் உரிமையாளன் காமச்சுவையுடன் பாடிய பாடலுக்கு பதில் இசைப்பாட்டாக அவளும் ஒரு பாடலைப் பாடியபடியே அவனைக் கடந்து செல்கிறாள். இதோ அப்பாட்டு. . .


  'கங்காணம் பார்க்க வந்த
   கருவண்டு மச்சானே. . .
  எங்கெங்கோ பார்க்கிறாயே-நீ
   ஏதேதோ பாடுகிறாயே!
  மாங்காயும் இல்லையடா-அது
   தேங்காயும் இல்லையடா. .
  பால் குடிக்கும் பிள்ளைக்கு-அது
   பால் குடம் தானடா. . .!'


என்று. காம இச்சை அவனின் பாடலிலும், தாய்மையின் கம்பீரம் அவளின் பாடலிலும் நிறைந்து ததும்புகிறது.
                      ***
ஒரு ஊரில் ஒரு பண்ணையார் அவருக்கு ஒரு அழகான மகள்; அப்பெண் வயசுக்கு வந்து வசீகர அழகுடன் இருக்கிறாள். அயலூர்க்காரன், ஒரு இளைஞன், அடிக்கடி வந்து அவளைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்கின்றன. 'காதல்' அரும்புகிறது.

அவளோ பணக்காரி; அவனோ ஏழை. ஆனாலும் இருவரும், தமிழ் சினிமா கதாநாயகன், கதாநாயகிபோலக் காதலிக்கிறார்கள். அவர்களின் காதல் நிறைவேற நிறைய தடைகள் உள்ளன.

கட்டுக்காவலை மீறி அவள் அவனைச் சந்திக்க முடியாது. ஆனால் அவனோ, அவளை அடைந்துவிடவேண்டும் என்று ஏங்குகிறான்.

இளவட்டப் பிள்ளை என்றாலும் படுசுட்டி அவள். அவளின் வீட்டைக் கடந்து அவன் செல்லும்போது, தன் நிலையைப் பாட்டால் தெரிவிக்கிறாள்.

கட்டுக்காவல் அதிகமாக உள்ளது. எனக்கு அண்ணன்மார்கள் ஆறுபேர். தந்தை ஒருவர். மொத்தம் ஏழுபேர் என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாண்டி நீ வந்து தேவையானால், 'சிறை' எடுத்துச் செல் என்பது போன்ற பொருளில், அவள் பாடுகிறாள்.

 "ஏழு மலை தாண்டி
  இலந்தை பழுத்திருக்கு
 ஏழுமலை தாண்டி வந்து
  இலந்தை மரம் ஏறி
 உலுக்கினால் கிடைத்திடும்
  ஒய்யாரக் கனியிரண்டும்
 அலுவச சுனையொன்றும்
   . . . . . . . . . . . .  .
என்று. அலுவசம் என்ற வட்டார வழக்குச் சொல்லுக்கு 'அதிசயம்' என்று பொருள் கொள்க! மார்புகளை ஒய்யாரக் கனி என்றும் அல்குலை அதிசய சுனை என்றும் அந்தச் சுட்டிப்பெண் சுட்டிக் காட்டிப் பாடுகிறாள்.
                    *****
இன்னொரு காதலன், காதலியின் பின்னாலேயே... லோ.. லோ.. என்று அலைகிறான். கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன் என்கிறான். அவளும் அழகிதான் என்றாலும் அவன் அலைகிற அலைச்சலைப் பார்த்து


'நாயாய் பேயாய். நாளும்
 நரவழிஞ்சி சுத்துதியே என்னை!
 பூவைச் சுத்தும் தேனீபோல்
 பொழுதெல்லாம் சுத்துதியே.. ஏன்.. ?'
- என்று கேட்க்கிறாள் அவள்.
அவளின் கேள்விக்கு, அவனும், பாட்டாலேயே பதில் சொல்கிறான், இப்படி.,
 ‘கிழியாத கொசுவத்துக்கும்.
 கீழ்மடி வெத்தலைக்கும்
 அழியாத குடங்களுக்கும்
 ஆசை கொண்டேன் பெண்மயிலே!,

என்று.
‘நரவழிஞ்சி’ என்ற வட்டார வழக்குச் சொல்லுக்கு சீரழிஞ்சு அல்லது மதிகெட்டு என்று பொருள் கொள்ளலாம்.

‘கிழியாத கொசுவம்’ கன்னி கழியாமைக்குக் குறியீடாக வந்தது. கீழ்மடி வெற்றிலை என்றது அல்குல். அழியாத குடங்கள் அவளின் மார்புகள்.

காதல்சுவையுடன் காமரசமும் கலந்ததால், பாடல் படிப்பவர்களை; கேட்பவர்களைப் பரவசம் கொள்ளவைக்கிறது.

ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். காலமும் காதலும் வளர்கிறது. அவளுக்கு, நாளாக, நாளாக அவன் மேல் நம்பிக்கை வருகிறது.

அவனோ பின்மாயக் கள்வன். அவளை வர்ணித்தே வசப்படுத்தி விடுகிறான். ஒருநாள் அந்திக் கருக்கல் நேரம் தனிமையில், மறைவான இடத்தில் இருவரும் சந்திக்கிறார்கள்.

அவன் அவளை அனுபவித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். முதலில் அவள் தயங்குகிறாள். ஆனால் அவன் அவளை விடவில்லை. “கட்டாயம் உன்னைக் கட்டிக் கொள்கிறேன்” என்று அவள் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறான்.

தனிமையும், இருளும், அவன் தந்த உறுதி மொழியும் அவளை இணங்க வைக்கிறது. அவளின் பெண்மை உடைந்தது. இருவரும் காமத்தின் ருசியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

அதன் பின்னும் அவர்கள் அடிக்கடி அந்திக் கருக்கலில் சந்தித்துக் கொண்டார்கள். ஆசை தீர இன்பத்தை அள்ளி நுகர்ந்தார்கள்.

‘மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள் என்பதற்கேற்ப, நாளா வட்டத்தில் அவனுக்குக் காதல் கசந்துவிட்டது.

காதலித்தவளைக் கண்கலங்க விட்டுவிட்டு, வேறொரு பணக்காரப் பெண்ணைப் பார்த்து அவன் திருமணம் செய்து கொள்கிறான்.

காதலனிடம் கற்பைப் பறி கொடுத்த அந்த அபலைப் பெண் கண்ணீர் வடித்தபடியே பாடுகிறாள் (ரகசியமாகத்தான்).

 'மேலாடை களைந்து
 மேனி எல்லாம் ரசித்தாய்;
 பூவாடை விலக்கிப்
 பூங்காம்பைச் சுவைத்தாய்.
 பாவாடை தூக்கிப்
 பால்கனியும் உண்டாய்- இப்ப
 பாடையிலே கிடத்தி விட்டுப்
 போவதென்ன ஞாயமோ..?,

என்று பாடல் வெள்ளையாக (வெளிப்படையாக) இருப்பதால் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். பாலியல் பதிவுகள் இப்பாடலில் வரிக்கு வரி இருந்தாலும், அப்பெண்ணின் கண்ணீர்ச் சுவைதான் முந்தி நிற்கிறது.

கிராமத்துப் பெண்களுக்கு கோவம்வந்தால், அவர்களின் வாயிலிருந்து ஆபாச வசவுச் சொற்கள் அடுக்கடுக்காய் உதிரும்.
நாட்டுப் பாடல்களில் உள்ள இப்பாலியல் பதிவுகள், துருத்திக் கொண்டு நில்லாமல், பாட்டோடும், பாடுபொருளோடும் பொருந்தி நிற்கின்றன

No comments: