கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-19 பையன் வயசுக்கு வந்துட்டான்

அந்தப் பெண் பிள்ளை வயசுக்கு வந்துட்டாள்” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். “பையன் வயசுக்கு வந்துட்டான்” என்று அறிவிப்பதற்கும் ஒரு சடங்கு இருக்கிறதா. . .?

ஆம். செட்டி நாட்டில் “பையன் வயசுக்கு வந்துட்டான்” என்பதை அறிவிக்கவும் ஒரு சடங்கை நடத்துகிறார்கள். அதற்குச் “சூப்பிடி” என்று பெயர் என்ற தகவலைச் சொன்னார் காரைக்குடியைச் சேர்ந்த கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் அமைப்பாளரான அரு.நாகப்பன் அவர்கள்.
பெண் ‘வயசுக்கு வந்துட்டாள்’ என்பதைக் குறிக்க பல்வேறு வழக்குத்தொடர்களை கிராமத்து மக்கள் பயன்படுத்துகிறார்கள். சடங்காயிட்டா, குத்த வச்சிட்டா, பூப்படைஞ்சிட்டா, என்பவை அவற்றில் சிலவாகும்.

பிறப்பு முதல் இறப்பு வரை தமிழகத்தில் வட்டாரம் வாரியாக, இனக்குழுவாரியாக, ஜாதிவாரியாக, (மலைவாழ் மற்றும் நாடோடி மக்கள் உள்பட) நிலவிய, இன்றும் நிலவுகிற வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தையும் சேகரித்தால் நாட்டார் துறைக்கு அத்தரவுகளே பெரும் பொக்கிஷமாகத் திகழும்.

வாழ்க்கை வட்டச் சடங்குகளுக்குப் பின்னால், மனித மனங்களின் உளவியலும், பண்பாட்டு அம்சங்களும் புதைந்து காணப்படுகின்றன.







தமிழகம் முழுவதும் உள்ள வாழ்க்கை வட்டச் சடங்குகளை எல்லாம் தொகுத்தால், அதுவே சுமார் ஆயிரம் பக்கத்திற்கு மேல் வரும், பெரும் தொகுப்பு நூலாகிவிடும். வாழ்க்கை வட்டச் சடங்குகளை மையமாகக் கொண்டு மேலை நாடுகளில் பல்வேறு விதமான நாட்டார்துறை மற்றும் மானுடவியல்துறை சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன.
 ஒரு மாதிரிக்காக இங்கே, செட்டி நாட்டு மக்களிடம் நிலவிய, நிலவுகிற சில வாழ்க்கை வட்டச் சடங்குகளை வாசகர்கள் முன் வைக்கிறேன். இத்தரவுகளில் பலவற்றை எனக்குத் தந்து உதவியவர் எழுத்தாளர் பழனியப்பா சுப்பிரமணியம் ஆவார்.

 இயற்கையை வழிபடுவது தமிழர் மரபு. சூரியனுக்கு நன்றி சொல்ல பொங்கல் என்ற பண்டிகையைக் கொண்டாடியதைப் போல, சந்திரனையும் தமிழர்கள் வழிபட்டார்கள். அதை ஒரு பண்டிகையாகவும் கொண்டாடினார்கள்.

 இந்தப் பண்டிகைக்கு “இராவண்டை” என்று பெயர். முழுநிலவு நாளன்று, பெண்கள் படையலிட்டு, பூரணச் சந்திரனை வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின்போது பெண்களோடு ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

 சந்திரனுக்குப் படைத்த பண்ட பலகாரங்களைப் பெண்கள் பகிர்ந்து உண்பார்கள். சிறுவர்களுக்கும் கொடுப்பார்கள். மாறுவேடப் போட்டிகளையும் நடத்துவார்கள்.

 முழுநிலவு நாளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஊர்ப் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் கூடி, விடியவிடிய ஆடல், பாடல் என்று அமர்க்களப்படுத்துவார்கள். புத்தாடைகள் உடுத்தியும், விரதம் இருந்தும் இவ்வழிபாட்டைக் கொண்டாடுவார்கள். “ஒளவையார் நோன்பு” என்ற வழிபாட்டு நிகழ்ச்சியைக் போன்றதாகும் இந்த ராவண்டை.

 ஒளவையார் நோன்பு என்ற வழிபாட்டு நிகழ்ச்சியை முழுக்க முழுக்கப் பெண்களே நடத்துவார்கள். நள்ளிரவில் ஒளவையார்க்கு, கொழுக்கட்டை அவித்துப் படைப்பார்கள்.

 பொழுது விடிவதற்குள், ஒளவையார்க்குப் படைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் அனைத்தையும் அங்கு கூடி வழிபாடு செய்யும் பெண்களே சாப்பிட்டுவிடவேண்டும். மீந்ததை வீட்டிற்கும் கொண்டு செல்லக் கூடாது.

 ஆண்களின் கண்ணில்கூட அந்தக் கொழுக்கட்டையைக் காட்டக் கூடாது. சிறுமிகளுக்கு, ஔவையார்க்குப் படைத்த கொழுக்கட்டைகளைத் தின்னக் கொடுப்பார்கள். சிறுவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள்.

 ஒளவையார் நோன்பு என்ற வழிபாட்டு நிகழ்ச்சியைப் போன்றதுதான் ராவண்டை வழிபாடும். ராவண்டை வழிபாட்டின்போது,

 வட்ட வட்ட ராவிலையும்

 மாசிப் பிறையிலையும்

 திட்ட முள்ள ராவாத்தா

 தெருவீதி வாராண்ணு

 போடுங்க பெண்டுகளா

 பொன்னார் திருக்குலவை

 போன்ற பாடல்களைப் பாடிப் பெண்கள் கும்மியடிப்பார்கள்.

 நகரத்தார்கள் என்று அழைக்கப்படும் செட்டி நாட்டுக்காரர்கள் ”புதுமை” என்றொரு சடங்கை நடத்துகிறார்கள். இன்றைக்கு குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இது மேலை நாட்டார் நமக்குக் கற்றுத் தந்த வழக்கமாகும்.

 ஒரு வயது அல்லது இரண்டு வயது நிரம்பியதும் குழந்தைகளுக்கு ”புதுமை” என்ற சடங்கை நடத்துவார்கள். இச்சடங்கின்போது, நடு வீட்டில் குழந்தையை ஒரு தாம்பாளத்தின்மீது புத்தாடை அணிவித்து நகைகள் போட்டு அலங்கரித்து உக்காரவைப்பார்கள். அதன்பின் அக்குழந்தையைப் பெற்றோர்களும், தாய்மாமனும் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்துப் பாடி மகிழ்வார்கள். இந்த புதுமை நிகழ்ச்சியின் செலவுகளை எல்லாம், பிள்ளையின் தாய்வீட்டுக்காரர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

 பையனுக்கு 16 வயது நிறைவடைந்ததையும் அந்தக் காலத்தில் ஒரு சடங்காக நடத்தினார்கள். பெண் பிள்ளைகளுக்கு சடங்கு கழித்தல் என்ற நிகழ்வை நடத்துவதைப் போன்று இளவட்டப் பையன்கள் 16 வது வயதை அடைந்ததும் இச்சடங்கை நடத்துவார்கள். பூனைமுடி, மீசையாக அரும்பும் காலத்தில், என் பையன் ”இளவட்டமாகி” விட்டான் என்பதை ஊர் உலகத்திற்கு அறிவிக்க இச்சடங்கை கிராமத்து மக்கள் ஒரு காலத்தில் நடத்தினார்கள். இச்சடங்கிற்கு ”சூப்பிடி” என்று பெயர்.

 நன்றாக அலங்கரித்த குதிரையின்மேல் உக்காரவைத்துப் பையனைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். இன் நிகழ்வின்போது, சொந்தக்காரர்களுக்கும், பந்தக்காரர்களுக்கும் தடபுடலாக விருந்தும் வழங்குவார்கள்.

 பெண்வீட்டுக்காரர்களின் கவனத்தைக் கவர்வதற்காக, ”என் பையன் வயசுக்கு வந்துட்டான்” என்பதை மறைமுகமாக ஊர், உலகத்திற்கு அறிவிப்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

 ”பிள்ளையார் நோன்பு” என்ற பண்டிகை, செட்டி நாட்டிற்கே உரியது. ஏனைய பகுதிகளிலும், இந்நிகழ்வு பரவலாகக் கொண்டாடப்படுகிறது. இரவில் விளக்கேற்றி பிள்ளையார் விக்ரகம் அல்லது படம் முன்பு அவல், பொரி, திரட்டுப்பால், பணியாரம் போன்ற பலகாரங்களைப் படைத்து வழிபடுவார்கள்.

 வேகவைத்த கருப்பட்டி பணியார மாவை பிள்ளையார்போல் பிடித்து அதில் திரியை வைப்பார்கள். இந்தத் திரியைக் கோடி வேஷ்டியிலிருந்து நூல் எடுத்து ஏழாக மடித்துச் செய்து கொள்வார்கள். இத்திரியை ”இழை” என்று சொல்கிறார்கள்.

 குடும்பத்தில் ஐந்து நபர் இருந்தால் ஆறு இழை தட்டில் இருக்கும். குடும்பத் தலைவர் இந்த இழையை (திரியை) நெய்யில் நனைத்து விளக்கில் ஏற்றி மூன்று முறை விக்ரகத்தைச் சுற்றிக் காண்பித்து வணங்கி வாயில் போட்டுக் கொள்வார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் வயது கிரமப்படி பிள்ளையாரை வணங்கி குடும்பத்தலைவரையும் விழுந்து கும்பிட்டு இழையை வாங்கி வாயில் போட்டுக் கொள்வார்கள். கடைசி இழையை குடும்பத் தலைவர் சாப்பிடுவார்.

 ”மாமவேவு” - திருமணத்தன்று மணப்பெண்ணின் மாமன் வீட்டார் பங்காளிகளுடன் வந்து நடத்தித்தரும் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்வின்போது ஓலைக்கடகத்தில் சீர் வைத்து அதைத் தலையில் சுமந்து கொண்டு வந்து கொடுப்பார்கள். தற்காலத்தில் ஓலைக் கடகத்திற்கு (பெட்டிக்குப்) பதில் வெள்ளிக்கடகத்தில் அல்லது பித்தளைக் கடகத்தில் வைத்துச் சீர் கொடுக்கிறார்கள்.

 தேங்காய், பூ, பழம், வெற்றிலை, மஞ்சள், குங்குமம் முதலிய மங்கலப்பொருள்களை வைத்து மணப் பெண் வீட்டைச் சேர்ந்த ஆண்களும், மணமகன் வீட்டைச் சேர்ந்த பெண்களும் ஒவ்வாருவராக ”வேவுக்”கடகத்தை உள்ளே வைத்துவிட்டு வருவார்கள்.

 அப்போது, இல்லத்தரசியின் தாய் வீட்டார் செலவில் நடைபெறும் இச்சடங்கின்போது குழந்தைகளுக்குத் தரப்படும் விளையாட்டுச் சாமான்களும் சேலைகளும் மற்றப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்படும்.

 ஆதிரை நட்சத்திரத்தில் கன்னிப் பெண்கள் வீட்டிற்கு வீடு சென்று ”சோறுஏற்கும்” சடங்கு ஒரு விழாவாகச் செட்டி நாட்டில் நடத்தப்படுகிறது. பெண்ணின் திருமணத்திற்குச் செய்து வைத்திருக்கும் நகைகளை எல்லாம் அணிவித்து அப்பெண்ணை வீட்டிற்கு வீடு அனுப்புகிறார்கள்.

 பெண்வீட்டார், ”வயதிற்கு வந்துவிட்ட என் மகளைக் கட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்”  என்பதை அறிவிக்க, இச்சடங்காக நடத்துகிறார்கள். பெண்ணின் உறவினர்களும், பங்காளிகளும் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள். விருந்து உபசரிப்பும் நடைபெறும்.

 திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்பு மாப்பிள்ளை குதிரையில் வந்து பெண்ணைப் பார்க்க வருவார். சிறுவயதில் திருமணம் (பாலிய மணம்) வழக்கத்தில் இருந்த காலத்தில் இச்சடங்கு நடந்திருக்க வேண்டும். இச்சடங்கு அதன் எச்சமாக இன்றும் தொடர்கின்றது. பெண் சிறு பிள்ளையாக இருந்ததால், சிறு பெண் பிள்ளையை (மணமகளை) பெண்ணின் உறவினர்களில் யாராவது ஒரு மூதாட்டி தூக்கி இடுப்பில் வைத்து மாப்பிள்ளைக்குக் காட்டி இருக்க வேண்டும். இந்நிகழ்வுக்கு ”பெண் எடுக்கிக் காட்டுதல்” என்று பெயர்.

 மரணமடைந்தவரின் மகளோ, மருமகளோ, குந்தாணியில் நெல்லைப் போட்டு உலக்கையால் இடித்து அரிசியாக்கும் சடங்கிற்கு ”பச்சை (நெல்) குத்துதல்” என்று பெயர். ஈமச் சடங்கின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது.

 பிணமானவரை, பிணப்பந்தலின் கீழ், ஒரு பாயை விரித்து (கோரைப்பாய் அல்லது ஓலைப்பாய்) அதன் மேல் கிடத்துவார்கள். இறந்தவரின் உடலைத் தூக்கிய பிறகு பந்தலின் கீழ் விரிக்கப்பட்ட, பிணம் கிடத்தப்பட்ட பாயை பிணமானவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் வந்து சுருட்டி வெளியே எறிந்து விடுவார். இந்தச் சடங்கிற்கு ”பாய் சுருட்டுதல்” என்று பெயர்.

 இன்ப, துன்ப நிகழ்ச்சிகளை ஒட்டி நெருங்கிய உறவினர்களுக்குத் தாய்வீட்டார் பெண்வழி உறவுக்குத் தரும் விருந்தைச் செட்டி நாட்டு மக்கள் ”காய்ச்சி ஊற்றுதல்” என்று அழைக்கிறார்கள்.

 சுவாமி அல்லது அம்மன் திருவீதி உலா முடிந்தவுடன் தீபராதனை, மண்டகப் படிதாரருக்கு பரிவட்டம், ”காளாஞ்சி” வழங்கல் நடைபெறும்.

 உடைத்த தேங்காயில் அரைமூடி, வெற்றிலை, பாக்கு, குங்குமம், திருநீறு வைத்துக் கோயில் சம்பிரதாயப்படி அர்ச்சகர் வரிசையாக வழங்குவதற்கு ”காளாஞ்சி” என்று பெயர்.

 இதை திருநெல்வேலி வட்டாரத்தில் ”முதல் மரியாதை” என்று சொல்கிறார்கள். முதலில் யார் இந்த காளாஞ்சியை வாங்குவது என்பதில் சர்ச்சைகள் எழுவதுண்டு. இச்சர்ச்சைகளால் கோயில் திருவிழாக்கள் வருசக்கணக்கில் நடைபெறாமல் போவதும் உண்டு. சில ஊர்களில் நீதிமன்றம்வரை இத்தகைய வழக்குகள் செல்வதுண்டு.

 பிள்ளை இல்லாதவர் பங்காளி வீட்டுக் குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்வதற்கு ”பிள்ளை கூட்டுதல்” என்று பெயர்.

 சிறிது காலத்திற்குப் பிறகு தம்பதிகளைத் தனிக்குடித்தனம் வைக்கும் சடங்கிற்கு ”வேறு வைத்தல்” என்று பெயர். இச்சடங்கிற்கான செலவையும், வருட போகத்தையும் (ஒரு வருசப் பயன்பாட்டிற்கான பொருள்களையும்) வாங்கிக் கொடுக்கும் செலவையும் பெண்ணின் தாய்வீட்டார் ஏற்பார்கள்.

 மேலே நாம் பார்த்த செய்திகளைப் பருந்துப் பார்வை நோக்கில் நாம் பார்த்தோம் என்றாலும், இத்தகைய வாழ்க்கை வட்டச் சடங்குகள் சார்ந்த நிகழ்வுகளில் பெரும்பான்மையானவற்றிற்குப் பெண்ணின் தாய்வீட்டாரே அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கை வட்டச் சடங்குகள் கேட்கவும் படிக்கவும் சுவாரஸ்யமாக இருப்பதுடன் ஆய்வுலகத்திற்கும் உதவுகின்றன.

No comments: