கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-16 அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.

வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.

இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.

நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.

நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)

* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)

* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)

* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)

* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)

* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)

* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் ("ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி!" என்கிறது ஒரு சொலவம்.

ஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)

* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)

* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)

* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)

* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)

* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)

* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)

* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)

* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)

* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)

* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)

* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)

* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)

* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)

* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)

* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)

* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)

* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)

* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)

* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.

* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)

* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)

இப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்தால் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.

மானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.

No comments: