கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-20 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சிறுவர்களின் கனவுலகம் அலாதியானது. அது அவர்களுக்கே உரிய பிரதேசம். அந்த எல்லைக்குள் இளவட்டங்களோ, முதியவர்களோ நுழையமுடியாது.

சிறுவர்களைக் மையமாகக் கொண்டு உலவிய நாட்டார் பாடல்கள் ஏராளம். வட்டாரம் வாரியாக அவைகளைத் தொகுத்தால் அதுவே பெரும் சேகரமாகத் திகழும்.

சிறுவர்கள் மட்டும் பாடும் பாடல்கள், சிறுமிகள் மட்டும் பாடும் பாடல்கள், இருபாலரும் சேர்ந்து பாடும் பாடல்கள் சிறுவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காக அச்சிறுவர்களின் தாய்மார்களோ, பாட்டிமார்களோ, செவிலித்தாயார்களோ பாடிய பாடல்கள் என்று அவைகளைப் பலவகைப்படுத்தலாம்.

சிறுவர்களை மகிழ்விப்பதற்காக அச்சிறுவர்களின் தாயாரோ அல்லது உறவினர்களோ பாடும் பாடல் இது. இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் இயற்றப்பட்டுள்ளது. எதுகையும் மோனையும், இயைபுத் தொடையும் மிக இயல்பாக இப்பாடலில் அமைந்துள்ளது. இப்பாடலை மறுவாசிப்பு செய்யும்போது, நம்மையும், இப்பாடல் கரைந்து மோன காலத்திற்குள் தள்ளுகிறது. ஞாபகம் வருகிறதே பாணியில் பின்னோக்கி நம் நினைவின் நிழல்களை நகர்த்தினால், நம் குழந்தைப் பருவத்து நிகழ்வுகள் நினைவுக்கு வரும். இனி பாடலைப் பார்ப்போம்.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாயக் கிளியே சாய்ந்தாடு

அன்னக் கிளியே சாய்ந்தாடு

ஆவாரம் பூவே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோயில் புறாவே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு

மாடப் புறாவே சாய்ந்தாடு

குழந்தைகள் பாடிக்கொண்டு விளையாடும் விளையாட்டுப் பாடல்கள் தனி ரகமானவை. குழந்தைகளின் விளையாட்டோடு, இசையும், இலக்கியமும் கலந்தது வியப்பான விசயமாகும்.

குழந்தைகளின் விளையாட்டுக்கள் காலாவதியானதுடன், சேர்ந்து அவர்கள் விளையாட்டோடு பாடிய பாடல்களும் காற்றில் கரைந்து விட்டன.

Ôகண்ணாமூச்சிÕ என்று ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு தமிழகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் புழக்கத்தில் இருந்ததுதான். எனவே அந்த விளையாட்டைப்பற்றிய விவரனை இங்கு வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடும்போது,

கண்ணாம் கண்ணாம் பூச்சாரே,

காது காது பூச்சாரே

எத்தனை முட்டை இட்டாய்?

மூணு மூட்டை!

மூணு முட்டையும் தின்னுப்புட்டு

ஒரு சம்பா முட்டை கொண்டுவா!

என்பன போன்ற பாடல்களைப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களுக்கு நாம் பொருள் விளக்கம் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது. இத்தகைய பாடல்களின் இசை அமைதியையும் தாளக்கட்டையும், சொற்செட்டுகளையும் மட்டும் நாம் அனுபவிக்கவேண்டும். பொருளற்ற வெற்றசைச் சொற்களாகவே இத்தகைய பாடல்களில் வார்த்தைகள் வந்து உக்கார்ந்திருக்கும். சான்றாக,

மாப்பிள்ளை மாப்பிள்ளே

மண்ணாங்கட்டி தோப்புளே

அரைக் காசு வெற்றிலைக்கு

கதி கெட்ட மாப்பிள்ளே. . .!

என்ற பாடலைக் கூறலாம்.

மைத்துனன் முறை உள்ள பையனை மச்சினன் முறை உள்ள பையன் கேலி செய்து பாடுவதாக அப்பாடல் அமைந்துள்ளது.

சக்கு சக்குடி சருவொலக்கையடி

குத்தொலைக்கையடி-குமரன் பொண்டாட்டி

பாளையத்திலே வாழ்க்கைப்பட்ட

பழனி பொண்டாட்டி. . .

வெற்றசைச் சொற்களால் ஆன இசைப்பாடல் இது.

பனை மரமாம் பனை மரமாம்

பச்சைக் கண்ணாடி

பல் இல்லாத கிழவனுக்கு

டபுள் பொண்டாட்டி. . .

என்ற குழந்தைப் பாடல் இரண்டாம் தாரமாகக் கிழவர் ஒருவர் இளம்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டதைக் கேலி செய்கிறது. இரண்டு பொண்டாட்டி என்பதை Ôடபுள் பொண்டாட்டிÕ என்று பாடுவது தமிழ் மொழியில் ஏற்பட்ட மொழிக்கலப்பைப் பதிவு செய்கிறது.

பலிஞ் சடுகுடு அடிப்பானேன்?

பல்லு ரெண்டும் போவானேன்?

உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்

ரெண்டு பணம் தெண்டம், தெண்டம்!

என்கிற பாடலிலும் கேலி செய்யும் தொனியே மிஞ்சி நிற்கிறது.

கிக்கீக்குஸ் கம்பந் தட்டை

காசுக்கு ரெண்டு கெட்டு

கருணைக் கிழங்கடா

வாங்கிப்போடா. . . வாங்கிப்போடா. . .!

இந்தப்பாடல் கரிசல் காட்டில் தோன்றியதாக இருக்க வேண்டும். கம்மங்கதிர், கம்பு, கம்மஞ்சோறு, கம்மந்தட்டை என்பவை கரிசல் காட்டிற்கே உரியவையாகும். இப்பாடலும் பொருளற்ற வெற்றசைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

ÔசடுகுடுÕ விளையாடும்போது, பிள்ளைகள் பலவிதமான சிறுபாடல்களைப் பாடிக்கொண்டே விளையாடுவார்கள். அவைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அத்தகைய குறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காண்போம்.

சடுகுடு மலையிலே

ரெண்டானை

தவறி விழுந்தது, தவறி விழுந்தது

கிழட்டானை. . . கிழட்டானை.


வெள்ளிப் பிரம்பெடுத்து

விளையாட வாராண்டா. . .

தங்கப் பிரம்பெடுத்து

தாலி கட்ட வாராண்டா. . .

தாலி கட்ட வாராண்டா. . .


தூத்தூ நாய்க்குட்டி

தொட்டியக்குடி நாய்க்குட்டி

வளைச்சி போடடா. . நாய்க்குட்டி. .

இழுத்துப் போடடா. . நாய்க்குட்டி. . .!


அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை

கல்லிலே போட்டா சுரைக் குடுக்கை

சுரைக் குடுக்கை. . . சுரைக் குடுக்கை. . .!


'கழிச்சிக் கல்' விளையாட்டு என்று ஒருவித விளையாட்டைச் சிறுவர்கள் சென்ற தலைமுறைவரை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலும் காணக் கிடக்கிறது.

சங்ககாலம் முதல் சென்ற தலைமுறைவரை தொடர்ந்து வந்த இந்தக் குழந்தை விளையாட்டை, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் கடத்த முடியாமல் போனது எதனால்?

இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமிக்க இந்தச் சிறுவர் விளையாட்டை, சமீபத்திய வாழ்க்கை முறையால் நாம் தொலைத்துவிட்டோம். விளையாட்டிலும், உலக மயமாக்கல் ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

விளையாட்டு என்றதும் மட்டைப் பந்து என்ற கிரிக்கெட்தான் இக்காலத்துப் பிள்ளைகளின் நினைவுக்கு வருகிறது. இந்த மட்டைப் பந்து விளையாட்டு என்பதும் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகள் விளையாடிய கிட்டிப்புல் என்ற சில்லாங்குச்சி விளையாட்டின், விஞ்ஞானபூர்வமான விரிவாக்கமே!


'கழிச்சிக் கல்' விளையாடும் பிள்ளைகள் விளையாட்டின்போது ஒவ்வொரு கல்லையும் எடுக்க, ஒருவிதப் பாடலைப் பாடுவார்கள். அத்தகைய பாடல்களில் ஒன்றைக் கீழே தருகிறேன். இதில் ஒன்று முதல் பத்துவரை உள்ள எண்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன!

கொக்குக்கிக் கொக்கு

ரெட்டை சிலாக்கு

மூக்குச் சிலந்தி

நாக்குலா வரணம்

ஐயப்பன் சோலை

ஆறுமுக தாளம்

ஏழுக்குக் கூழு

எட்டுக்கு முட்டு

ஒன்பது கம்பளம்

பத்துப் பழம் சொட்டு

இதுவும் பொருளற்ற ஒரு வித இசைப்பாடலே. குழந்தைகளின் நினைவாற்றலை வளர்க்க இத்தகைய பொருளற்ற இசைப்பாடல்கள் உதவின.

அந்தாதித் தொடை அமைந்த வினா-விடை பாணியிலான சில குழந்தைப் பாடல்கள் கேட்பதற்கும் பாடுவதற்கும் ரஸமாக இருக்கிறது. அத்தகைய பாடல்களில் சான்றுக்கு ஒரே ஒரு பாட்டை மட்டும் கீழே தருகிறேன்.

ஆண்டி. . . ஆண்டி.. .

என்ன ஆண்டி?

பான்னாண்டி. .

என்ன பொன்?

காக்காப் பொன்.

என்ன காக்காய். . .?

அண்டங்காக்காய். . .

என்ன அண்டம்?

பூ அண்டம்.

என்ன பூ?

பனம் பூ.

என்ன பனை?

தாளிப் பனை.

என்ன தாளி?

நாக தாளி.

என்ன நாகம்?

சுத்த நாகம்

என்ன சுத்தம்?

வீட்டுச் சுத்தம்

என்ன வீடு?

ஓட்டு வீடு

என்ன ஓடு?

பாலோடு

என்ன பால்?

நாய்ப் பால்

என்ன நாய்?

வேட்டை நாய்

என்ன வேட்டை?

பன்றி வேட்டை

என்ன பன்றி?

ஊர்ப் பன்றி

என்ன ஊர்?

கீரையூர்

என்ன கீரை?

அறைக்கீரை

என்ன அறை?

பள்ளி அறை

என்ன பள்ளி?

மடப் பள்ளி

என்ன மடம்?

ஆண்டி மடம்

என்ன ஆண்டி

பொன்னாண்டி . . .

இந்தப் பாடல் இத்துடன் முடிவதில்லை. தேவை எனில் குழந்தைகள் 'என்ன பொன்?' என்று கேள்வியை எழுப்பி அதற்கு 'ஆணிப் பொன்' என்று விடையும் கூறிச் சங்கிலித் தொடர்போல் பாடலைத் தொடரலாம்.

மொழிப் பயிற்சிக்கும், உச்சரிப்புப் பயிற்சிக்கும், நினைவாற்றலை வளர்க்கவும் கேட்ட கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் கூறும் மனத்திறனையும் இத்தகைய பாடல்கள் வளர்க்க உதவின.

குழந்தைப் பருவம் முடிந்து வளர் இளம் பருவத்தில் அடி எடுத்து வைக்கும் இளங் குமரிப்பெண்கள் மற்ற ÔமுறைÕகாரப் பெண்பிள்ளைகளைக் கேலி செய்து விளையாட்டாகச் சில பாடல்களைப் பாடுகிறார்கள். நேசமிக்க இத்தகைய பாடல்களும் இன்று காணாமல் போய்விட்டன.

மாதிரிக்கு அத்தகைய பாடல்களில் இந்த ஒன்றை மட்டும் வாசகர்கள் சுவைக்கத் தருகிறேன்.

அத்தான் தங்கையே ராமக்கா

அரிசிக் காரன் வந்திட்டான்

சின்ன வீட்டிலே புகுந்துக்கோ

சிலுக்குத் தாளம் போட்டுக்கோ

புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ

புருசன் கூடப் பேசிக்கோ. .!

ஒரு காலத்தில் குழந்தைகளின் வாழ்வுலகமும், இளம் பருவத்து வளர் இளம் பெண்களின் கனவுலகமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கிய சோலைகளாக இருந்தன!

இன்று அவர்களின் கனவுலகமே பாலைவனங்களாகிவிட்டன. கட்டற்ற கற்பனை வெளியில், மொழியின் கைபிடித்து இசையின் காலடித்தடம் தேடி அலைந்த பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வனுபவம், இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை.

நான் சிறுவனாய் இருந்து பெற்ற வாழ்வனுபவத்தை, என் மகனுக்குக் கடத்த முடியவில்லை. என் பேரனின் கனவுலகம் ரோபோட்டுகளோடு அமையலாம். சமுக காலத்திய இந்தக் கலாச்சார மாற்றம் நம்மை மேல் நோக்கி நகர்த்துகிறதா? புதைகுழியில் தள்ளுகிறதா? புரியவில்

No comments: