கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-27 நாட்டார் நீதிபதிகள்

நீதித்துறை என்பது இன்றைய உலகில் தனிப்பெரும் துறையாக வளர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும் நீதித்துறை என்பது, உருவமற்றதாக, கண்ணுக்குத் தெரியாத அரூபமாக இயங்கியது.

நாலுபேர் சேர்ந்து வாழ்கிறபோது அங்கே பிரச்சினை என்பது வந்துவிடும். பிரச்சினை என்று வந்துவிட்டால், அதைத் தீர்த்துவைக்க என்று ஒரு நபர் தேவைப்படுவார்.

கூட்டங்கூட்டமாக மக்கள் சேர்ந்து வாழத்தலைப்பட்ட போது, இனக்குழுச் சமூகம் உருவாகிவிட்டது. ஒத்த பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும், உடைய மக்கள் கூட்டத்தைத்தான் ‘இனக்குழு’ என்று சொல்கிறார்கள்.

இனக்குழுமக்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், அவர்களுள் சண்டை. சச்சரவுகளும், மனத்தாங்கல்களும் இருக்கத்தான் செய்தன. ஒவ்வொரு இனக்குழுமக்களுக்கும் ஒரு தலைவன் தோற்றுவிக்கப்படுவான். கூட்டமாகக் கூடி வாழ்கின்றவர்களுள் திறமையும், வீரமும், விவேகமும் மிக்க ஒருவன் இயல்பாகத் தலைவனாகிவிடுவான்.

இனக்குழு மக்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளையும், மனக்கசப்புகளையும் அவ்வினக் குழுவின் தலைவனே தீர்த்து வைப்பான். தலைவனின் தீர்ப்பிற்கு அவ்வினக்குழு மக்களும் கட்டுப்பட்டு, அத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்படித்தான் ஆதி காலத்தில் இனக்குழுமக்களின் தலைவர்களே நீதிபதிகளாகவும் விளங்கினார்கள்.

மன்னர்ஆட்சி நடைபெற்றபோது, மன்னரே நீதிபதியாகவும் இருந்து தீர்ப்பு வழங்கினார். ஒரு நாட்டில் உள்ள அனைத்து விதமான, வழக்குகளுக்கும் மன்னரே தீர்ப்பு வழங்க முடியாது என்பதால், வரிவசூல் வகைக்காகப் பிரிக்கப்பட்ட ‘பிர்க்காக்’ களின் தலைவர்களையே, அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் சண்டை, சச்சரவுகளைத் தீர்த்து வைக்கும் படி மன்னர் உத்தரவிட்டிருந்தார். பிர்க்காக்களின் தலைவர்களால் தீர்க்க முடியாத வினோத வழக்குகள் மன்னரின் பரீசீலனைக்கும், தீர்ப்பிற்கும் அனுப்பப்பட்டன.

இன்றைய தாலுகா போன்ற அன்றைய பிர்க்காக்களின் தலைவர்களுக்குக் கீழே வட்டார வாரியாக வரிவசூல் செய்யும் சுபேதார்கள் என்ற அதிகாரிகள் இருந்தார்கள். அவர்கள், வட்டார வாரியாக நடைபெறும் வழக்கு, வம்புகளைத் தீர்த்து வைத்தார்கள்.

சுபேதார்களுக்குக் கீழே கிராமங்கள் தோறும் வரிவசூல் செய்கிற சேர்வைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் கிராமங்களில் உருவாகிற வம்பு வழக்குகளைத் தீர்த்து வைத்தார்கள்.

சேர்வைக்காரர்களுக்கும் கீழே, கிராமங்களில் ஒவ்வோர் ஜாதிக்கும் ஒரு நாட்டாமை இருந்தார். இன்றும் தமிழகத்தின் கிராமங்கள் பலவற்றிலும் ஜாதி வாரியான நாட்டாமைகள் இருக்கின்றார்கள். அவர்கள், தங்கள் ஜாதி மக்களுக்குள் ஏற்படும் சிறு,சிறு, சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைத்துவிடுகிறார்கள்.

இவர்களுக்கும் கீழே. ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் ‘குடும்பக்காரர்கள்’ என்று ஒரு உட்பிரிவினர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பார்.

குடும்பங்களில் ஏற்படும் சிறு மனத்தாங்கள், சண்டை சச்சரவு சொத்து பாகம்பிரித்தல், போன்றவற்றை அக்குடும்பத் தலைவர் (மூப்பர்) தீர்த்து வைப்பார்.

இப்படி நீதித்துறை என்பது கிராமிய வாழ்வில், குடும்ப மூப்பனில் இருந்து செயல்படத் துவங்குகிறது. இப்படி பல்வேறு அடுக்குகளாக நாட்டார் நீதி பரிபாலனம் அன்றைய காலகட்டத்தில் நடந்ததால், ஆங்காங்கே தோன்றும் சண்டை சச்சரவுகள், குற்றங்கள் அவ்வப்போது, அங்கேயே தீர்த்து வைக்கப்பட்டன.

குடும்ப மூப்பனில் இருந்து மன்னர் வரை தட்டுத்தட்டாக, அடுக்கடுக்காக உள்ள நீதித்துறை காலங்காலமாக வித்தியாசமான வழக்குகளைச் சந்தித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்தகைய வித்தியாசமான வேடிக்கையான வழக்குகளையும், அவ்வழக்குகளுக்கு அன்றைய நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளையும் பற்றி விபரங்களைச் சேகரித்தால் அதுவே சுவாரஸ்யமான பெருந் தொகுப்பாகத் திகழும்.

அக்காலத்தில் இப்படி அடுக்கடுக்காக, நீதிபரிபாலனம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததால் மன்னரிடம் போய் வழக்குகள் குவியாமல் இருந்தன. பெரும்பாலும் அக்காலத்தில் மேல் முறையீடுகள் தவிர்க்கப்பட்டன. மூப்பனின் தீர்ப்பைக் குடும்பங்காரர்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டார்கள்.

சமுதாய நாட்டாமை, ஊர் நாட்டாமை என்ற சித்திரத்தை தமிழ்சினிமா உலகம், ஜமுக்காளம், செம்பு, மரத்தடித் திண்டு, நீளத்துண்டு. என்று காட்சிப்படுத்தியுள்ளது. உண்மையில் கிராமங்களில் அப்படி ஒரு அமைப்பு எங்கள் வட்டாரத்தில் கிடையவே கிடையாது.

குடும்ப மூப்பனுக்குக் கட்டுப்படாத வாதியும், பிரதிவாதியும் சமூக (ஜாதி) நாட்டாமையிடம் அல்லது ஊர் நாட்டாமையிடம் தங்கள் வழக்கை முறையிடுவார்கள். நாட்டாமை வழக்குகளை சாட்சிகளின் அடிப்படையில் விசாரித்து, குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தீர்ப்பை வழங்குவார். தண்டனைகள் உளவியல் பூர்வமாகவும், மன்னிக்கும் மனோபாவம் கொண்டதாகவும் இருக்கும்.

உதாரணமாக, சிறு குற்றங்களுக்கு,

* கோயில் மரங்களுக்கு ஒரு வாரம் தினமும் கோயில் கிணற்றில் இருந்து தண்ணீர் சுமந்து வந்து ஊற்ற வேண்டும்.* கோயில் விளக்கிற்கு ஒருவார காலம் எண்ணெய் (விளக்கெண்ணெய்) வாங்கி வந்து ஊற்ற வேண்டும்.

* ஊர்க் கோயில் மரத்தை நூறுதரம் சுற்றி வர வேண்டும்.

* பிள்ளையார் கோயிலுக்குப் பத்துத் தேங்காய் வாங்கி விடலை போட வேண்டும்

என்பன போன்ற மென்மையான தண்டனைகளை நாட்டமைகள் அல்லது

குடும்ப மூப்பர்கள் கொடுப்பார்கள்.

இத்தகைய தண்டனைகளை குற்றம் இழைத்தவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்ட மாட்டார்கள். கோயில் மரத்திற்குத் தண்ணீர் ஊற்றுவது, கோயில் விளக்கிற்கு எண்ணெய் வாங்கி ஊற்றுவது. கோயில் மரத்தைச் சுற்றி வருவது, பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது போன்ற காரியங்கள் ஏற்கனவே மக்கள் நேர்ந்துகொண்டு வழக்கமாகச் செய்து வருபவைதான். எனவே, இத்தகைய எளிய, இனிய தண்டனைகளைச் சிறுகுற்றம் இழைத்தவர்கள், மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள்.

"தண்டனையை அனுபவிக்கும் அதே நேரம் கடவுளுக்கு உகந்த காரியத்தைச் செய்கிறோம்" என்ற எண்ணம் ஏற்படுவதால் குற்றவாளி உளவியல் பூர்வமாகப் பாதிக்கப்படுவதில்லை.

குற்றம் இன்னும் சற்றுக் கடுமையாக இருந்தால் நாட்டாமை பிள்ளையார் சாமியின் முன்பு நூறு ‘உக்கி’ போடு என்று தீர்ப்புச் சொல்வார்.

பிள்ளையார் சாமியின் முன்பு ‘உக்கி’ போடுவதுவும் ஒரு வித நேர்த்திக் கடன்தான். அதே சமயம் உக்கி போடுவது (கைகளால் இட வலக் காதுகளை மாற்றிப் பிடித்தபடி, உக்கார்ந்து எந்திரிப்பது) ஒருவித உடற்பயிற்சியும் ஆகிவிடுகிறது. எனவே இந்தத் தண்டனையையும் குற்றவாளி மனமுவந்து ஏற்றுக் கொள்கிறான்.

குற்றத்தின் கடுமையைப் பொறுத்து தண்டனையும் கடுமையாக இருக்கும். அத்தகைய தண்டனைகளில் சிலவற்றை இனிப் பார்ப்போம் :

* மன்னிப்புக் கோருதல்

* சட்டைபோடாமல் நெடுஞ்சாண்கிடையாகச் சபையோரைப் பார்த்துக் கும்பிட்டு விழுதல்

* குற்றவாளியை நாற்சந்தியில் வைத்து (நான்கு வீதிகளும் சந்திக்கும் இடத்தில் வைத்து) தலையை மொட்டையடித்தல் அல்லது நான்கு கீத்தாக (கூட்டல் அடையாளம் போல) சிரைத்தல்.

* மொட்டையடித்த தலையிலும் முகத்திலும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல். அத்தோடு குற்றவாளியைக் கழுதைமேல் ஏற்றித் தெருத் தெருவாக அழைத்துச் செல்லுதல்.

* அபராதத் தொகை விதித்து அதை ஊர் நாட்டாமையிடம் கொடுக்கச் செய்தல்.

* பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பாலியல்

கொடுமைக்கு ஆளான பெண் திருமணம் ஆகாதவராக இருந்தால்,

அப்பெண்ணையே இரண்டாந்தாரமாகக் குற்றம் செய்தவனே கட்டிக் கொள்ள

வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணைக்

குற்றம் இழைத்தவன் கட்டும் போது முதல் தாரத்தின் பேருக்கு சில அசையாச்

சொத்துகளை (தோப்பு, வயல், வீடு) எழுதி வைத்துவிட வேண்டும் என்று

வற்புறுத்துவார்கள்.

* குற்றத்தை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும் போது வாதியையோ அல்லது பிரதிவாதியையோ. கோயில் முன்பு சத்தியம் செய்யச் சொல்வார்கள். கோயில்

முன்பு சத்தியம் செய்வதிலும் கோயில் விளக்கை அணைத்துச் சத்தியம் செய்வது,

கோயில், வாசலில் எரியும் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வது என்று

பலவிதம் இருக்கிறது. கண்களைப் பிணையமாக வைத்துக் ‘கண்ணாணை’ என்றும்

பெத்த பிள்ளையின் தலையில் கைவத்து (பிள்ளையைப் பணயமாக வைத்து)

சத்தியம் செய்வது என்று பல முறைகள் நடப்பில் உள்ளன.

நாட்டாமையின் தீர்ப்பிற்குக் குற்றம் சாட்டப்பட்டவன் கட்டுப்பட மறுக்கிற போது, குற்றவாளியை ஊர் விலக்கி வைக்கும் நடைமுறையும் சில ஊர்களில் இருக்கிறது.

ஊர் விலக்கி வைத்தல் என்பது உளவியல் பூர்வமாக மிகக் கடுமையான தண்டனையாகும். ஊர் விலக்கம் செய்யப்பட்டவன் அல்லது செய்யப்பட்டவள் அவ்வூர் பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்கக்கூடாது. கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடக்கூடாது ஊர் விலக்கம் செய்தவளுடன், அவ்வூர்க்காரர்கள் (அல்லது சமுதாயத்தவர்கள்) யாரும் பேசவும் கூடாது, அவர்களிடம் எந்த விதமான கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி மீறி யாராவது ஊர் விலக்கம் செய்தவர்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அதுவும் குற்றமாகக் கருதப்பட்டு அதற்கும் தண்டனை வழங்கப்படும்.

ஊர் விலக்கம் என்பது சில நேரம் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்திற்கும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

இன்றும் இத்தகைய கிராமப் பஞ்சாயத்துகள், (வழக்கின் தீர்ப்புகள்) சிலகிராமங்களில் நடப்பில் உள்ளன. இதனால் காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்லும் வழக்குகளின் எண்ணிக்கை குறைகிறது. கிராமப் பஞ்சாயத்தின் மூலம் அனேக வழக்குகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுத் தீர்ப்பும் வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் வாதிக்கும், பிரதிவாதிக்கும் அலைச்சலும், நேரமும், பணமும் மிச்சமாகிறது.

இத்தகைய நாட்டார் பஞ்சாயத்துகளில் சிலநேரம் செல்வாக்கும் பணவசதியும், குடும்பகௌரவம் உள்ள ஆட்களுக்கு சார்பாகச் சில வழக்குகளின் தீர்ப்புகள், ஒருதலைப்பட்சமாக வழங்கப்படுவதும் உண்டு. இத்தகைய விவகாரத்தை "இடுக்கிய விவகாரம்" என்று கிராமப்புறத்து மக்கள் கூறுகின்றார்கள்.

பஞ்சாயத்துகள் சில இடங்களில் "கட்டப் பஞ்சாயத்தாகவும்" நடைபெறுகின்றது. இத்தகைய கட்டப் பஞ்சாயத்துகளில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை. ஆளுக்கு ஏற்ப, ஜாதிக்கு ஏற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கட்டப்பஞ்சாயத்தில் தீர்ப்புகள் வழங்கப்படும்.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள நீதித்துறைக்கு பிள்ளையார் சுழி போட்டது இது போன்ற நாட்டார் பஞ்சாயத்துகள்தான் என்று கூறலாம்.

மக்களை அமைதிப்படுத்தி வாழவைப்பதில் இத்தகைய எளிய நீதி அமைப்புகள் காலங்காலமாகத் தொண்டு செய்து வருகின்றன

No comments: