கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 21, 2013

சொலவடைகளும் பழமொழிகளும் 3

   
    
நகைச்சுவையாக, அங்கதமாக, சிரித்துக்கொண்டே, கிராமத்து மக்கள் சொல்லிக்கொள்ளும் சில சொலவடைகள் ஆழிய பொருள் நயமிக்கதாகவும் சமூக விமர்சனமாகவும் இருக்கின்றன.
அப்படிப்பட்ட சொலவடைகளில் ஒன்றுதான் “காத்துட்டுக்கு குதிரை வாங்க வேண்டும். அத காற்றாய் பறக்கவும் வேண்டும்” என்பது.
‘துட்டு அரைத்துட்டு, கால்துட்டு’ என்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்தச் சொலவடை உருவாகி இருக்கிறது. இச்சொலவடையில் உள்ள கால்துட்டு என்ற வார்த்தையிலிருந்து இச்சொலவடை உருவான காலத்தை சரியாகக் கணித்து விடலாம்.
“குறைந்த விலையில் ஒரு பொருளை வாங்க வேண்டும். அது நிறைவான பயனைத் தர வேண்டும்” என்ற மக்களின் நுகர்கலாச்சாரம் சார்ந்த மனநிலையை இச்சொலவடை சொல்வது வாசகர்களுக்கு முதல் வாசிப்பில் புரியும். ஆனால் இச்சொலவடையின் அருகில் நின்று நிதானமாக மறுவாசிப்பு செய்தால் பண்ணையார்களின் முதலாளித்துவ மனோபாவம் இச்சொலவடையில் பதிவாகி இருப்பது புரியும்.
‘மிகக் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்க வேண்டும். அவர்கள் மிகக்கடுமையாக உழைக்கவும் வேண்டும்’ என்ற முதலாளித்துவ சிந்தனை. இப்பழமொழியில் பதிவாகி உள்ளது.
மக்களின் எதார்த்த மனோபாவம் பண்ணையாளர்களின் ஏகாதிபத்திய மனோபாவம் முதலியவை இச்சொலவடையில் பதிவாகியுள்ளதை என்னைப் போன்றோர் விளக்கிச் சொல்ல வேண்டியதிருக்கிறது.
----
முந்தைய சொலவடையில் ‘காத்துட்டு’ என்ற நாணயத்தைக் குறிக்கும் சொல். அச்சொலவடை தோன்றிய காலத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. “சாமியே சைக்கிளில் போகிறபோது, பூசாரி புல்லட் கேட்டானாம்” என்ற சொலவடையில் ‘சைக்கிள், புல்லட்’ என்ற சொற்கள் வந்துள்ளன. ‘சைக்கிள், புல்லட்’ என்ற வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில் இச்சொலவடை உருவாகி இருக்க வேண்டும். இச்சொலவடையும் சொற்களால் அது தோன்றிய காலத்தை உணர்த்தி நிற்கிறது
‘எலக்ட்ரிக்கை நம்பி எலை (இலை) போடாதே” என்கிறது ஒரு சொலவம். மின்சாரத்தை முழுமையாக நம்பி எந்தக் காரியத்திலும் இறங்காதே என்று எச்சரிக்கிறது இச்சொலவம்.
‘கெரண்ட் எப்ப கட்டாகும்’ என்று தெரியாது. அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று. ஆனால் மின்சாரம் புழக்கத்திற்கு வந்த புதிதில் மின் வெட்டின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு எவனோ ஒரு கிராமத்தான் உருவாக்கிய சொலவடையாகும் இது. இச்சொலவம் தான் உருவான காலகட்டத்தைச் சில சொற்களால் சுட்டிக்காட்டுகிறது. சொலவத்தை உருவாக்கியவன் பெற்ற அதே அனுபவம். அச்சொலவத்தை இன்று நாம் பயன்படுத்தும்போதும் நமக்குக் கிடைக்கிறது. அதனால்தான் இச்சொலவம் இன்றுவரை உயிர் வாழ்கிறது.
‘எலை’ என்பது இலை என்பதின் திரிபு. இந்த இலை சாப்பாட்டு இலையைச் சுட்டி நிற்கிறது. இரவு நேரத்தில் எலக்ட்ரிக் லைட்டை நம்பி சாப்பிடத் தொடங்காதே’ என்று எச்சரிக்கிறது இச்சொலவம். இருட்டில் சாப்பிடக்கூடாது என்பது ஐதீகம். இருட்டில் சாப்பிடும்போது சாப்பாட்டில் கண்ணுக்குத் தெரியாமல் புழு,பூச்சி போன்றவை விழுந்து விட வாய்ப்புள்ளது. எனவே இருட்டில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எலக்ட்ரிக்லைட் எரிந்தாலும் அதை நம்பி கிராமத்து மக்கள் சாப்பிட மாட்டார்கள்.  தூரத்தில் குத்துவிளக்கு எரிந்து கொண்டே இருக்கும். இச்சொலவமும் எலக்ட்ரிக் என்ற மின்சாரம் பயன்பாட்டிறகு வந்தபிறகு உருவானதாகும். ‘எலக்ட்ரிக்’ என்ற சொல் இச்சொலவம் தோன்றிய காலகட்டத்தை உணர்த்துகிறது.
........
ஏ.டி.எம். என்ற இயந்திரம் புழக்கத்திற்கு வந்த பிறகு ஏ.டி.எம். என்ற இயந்திரத்தின் குறைபாடுகளை அனுபவித்த எவனோ ஒருவன், ‘ஏ.டி.எம்.ஐ நம்பி எவங்கிட்டயும் கடன் வாங்காதே’ என்ற சொலவத்தை மிகச்சுலபமாக உருவாக்கி உலவவிட்டிருக்கிறான். இச்சொலவமும் தான் உருவான காலகட்டத்தை உணர்த்துகிறது.
காத்துட்டு, சைக்கிள், புல்லட், எலக்ட்ரிக், ஏ.டி.எம். என்ற சொற்கள் அமைந்த சொலவங்கள் அவை தோன்றிய காலத்தைச் சொல்லாமல் சொல்கின்றன. காலங்காலமாக புதிய புதிய சொலவங்கள் மக்களால் படைக்கப்படுகின்றன என்ற செய்தியையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
.............
சில சொலவங்கள் மாற்று வடிவத்தை அடையும். கலாச்சார மாற்றத்தால் பண்பாட்டு மாற்றத்தால் அத்தகைய மாற்றங்களை அடையும்.
‘உடையவனே ஒண்ணுமில்லாமல் அலைகிறபோது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டிச்சாம்’ என்கிறது ஒரு சொலவடை. பண்ணையாரே சாதாரண ‘மல்’ வேட்டி உடுத்திக்கிட்டு அலையும்போது அதே பண்ணையாளரிடம் வேலை செய்கிறவன் பட்டு வேட்டி எடுத்துத் தாருங்கள் என்று கேட்கமுடியாது என்ற தொனியில்தான் இச்சொலவடை அமைந்துள்ளது. அதே தொனியில் இஸ்லாமியர்கள் குதிரை வணிகம் செய்ய இந்தியாவுக்குள் வந்தபிறகு ஒரு சொலவடை உருவாக்கப்படுகிறது. ‘ராவுத்தரே கொக்கா பறக்கிறபோது குதிரை கோதுமை ரொட்டி கேட்டிச்சாம்’ என்பதுதான் அச்சொலவடை.
கவனித்துப் பார்த்தால் இரண்டு சொலவடைகளும் ஒரே மாதிரியான தொனியில்தான் பேசுகின்றன. ஆனால் முந்தைய சொலவடையின் காலம் வேறு. ‘ராவுத்தர்’ சம்பந்தப்பட்ட சொலவடை உருவான காலம் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரே பொருளை வலியுறுத்தும் பல சொலவடைகள் காலங்காலமாகத் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன.
‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சிட்டான்’ என்பது ஒரு சொலவடை. இந்த பொருளில் இஸ்லாமிய கலாச்சாரத்தில் பிற்காலத்தில் வேறொரு சொலவடை. யாரோ ஒரு இஸ்லாமியரால் படைக்கப்படுகிறது. “ஊரா கோழியை அறுத்து உம்மா (அம்மா) பேர்ல பாத்திகா ஓதிட்டான்” என்பதுதான் அச்சொலவடையாகும். பாத்திகா என்பது இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஓதுவது.
இந்தச் சொலவடைகள் இரண்டும் சொல்லவரும் பொருள் ஒன்றுதான். சொல்லப்படும் களம், கலாச்சாரம் போன்றவைகள்தான் வேறாகும்.
‘எலக்ட்ரிக்’ என்ற கெரண்டு புழக்கத்திற்கு வந்த காலம் ஒன்று. ‘புல்லட்’ என்ற வாகனம் புழக்கத்திற்கு வந்த காலம் ஒன்று ‘ஏ.டி.எம்’ என்ற இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும் காலம் வேறு. ஆக, காலங்காலமாகச் சொலவடைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“ சொலவடைகள் பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், கதையாடல்கள் போன்றவை காலங்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வாய்மொழி வடிவில் தோன்றிக் கொண்டேதான் இருக்கும்.
‘நாட்டார் தரவுகள்’ என்றால் அவைகள் மிகவும் பழமையானவை, எழுத்து, மொழி தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி வடிவில் தோன்றியவை’ என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
ஒரு காலத்தில் இருந்த புழுப்பூச்சிகள் இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்வதில்லை. ஆனால் இன்றைய இயற்கையின் தகவமைப்புக்கு ஏற்ப புதிய புதிய புழுப்பூச்சிகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. அதுபோல காலங்காலமாக நாட்டுப்புறவியல் சார்ந்த ஆக்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். மனுஷங்க இருக்கிறவரை மனுஷ நாத்தமும் இருந்து கொண்டேதான் இருக்கும். மூக்கு இருக்கிற வரை சளியும் இருக்கும் என்பதைப் போல...

No comments: