கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-23 ஒண்ணே முக்காத் தையன்னா ஒலியுல்லா

இஸ்லாமிய நாட்டார் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொடரை எழுதுங்கள் என்று ‘சமரசம்’ என்ற மாதம் இரு இதழின் பொறுப்பாசிரியர் கேட்டுக் கொண்டதால், இஸ்லாமிய நாட்டார் மரபுகளைச் சேகரிக்க நீண்டதொரு களப்பணி பயணத்தை மேற்கொண்டேன்.



அப்படிப் பயணம் மேற்கொண்டு நான் சேகரித்த கட்டுரைகள் சமரசம் இதழில் ஓராண்டுகள் பிரசுரமாயின. அத்தொடரில் இடம் பெறாத சர்ச்சைக்குரிய ஒரு நாட்டார் சொல்கதையை இந்த இதழில் பதிவு செய்கிறேன்.

தர்ஹா வழிபாடு குறித்து இன்று இஸ்லாமியச் சிந்தனைத் தளத்தில் வெகுவாக விவாதிக்கப்படுகிறது. தர்ஹா வழிபாடுகளை ஆதரித்தும் எதிர்த்தும் இன்று இஸ்லாமியர்களின் சிந்தனைப் பரப்பில் கருத்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இஸ்லாம் பரவ பல்வேறு சூபிஞானிகள் தத்துவார்த்த ரீதியாக உழைத்தார்கள் என்ற கருத்தைச் சிலர் முன் வைக்கிறார்கள். இஸ்லாம் மார்க்கம் பரவ தன் வாழ்வையே அர்ப்பணித்த சில இறைநேசச் செல்வர்களின் நினைவிடங்களும் அடக்க ஸ்தலங்களும் இன்று தர்ஹாக்களாக நிலைபெற்றுள்ளன.

கிராமத்து மக்கள் இத்தகைய தர்ஹாக்களை மனக்கவலை போக்கும்- ஒரு ஆன்மீகக் குறியீடாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தர்ஹாக்களின்மீது இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, மாற்றுமதத்தைச் சாந்தவர்களும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். தென் தமிழகத்தில் பொட்டல்புதூரில் உள்ள மைதீன் அப்துல் காதர் ஜெயிலானி அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டுள்ள தர்ஹா இன்றும் சுற்று வட்டார மக்களால் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் விஜய நாராயணபுரம் என்ற ஊரில் உள்ள மேத்தைப் பிள்ளை அப்பா தர்ஹாவும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சான்றாதாரமாகத் திகழ்கிறது.

இறைநேசச் செல்வியும் பெண் சூபிஞானியுமான செய்யதலி பாத்திமா அவர்களின் அடக்கஸ்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரை என்ற ஊரில் உள்ளது.

‘ஓர் இறைக்கொள்கைக்கு விரோதமானது இந்த தர்ஹா வழிபாடு’ என்று கூறி வகாபிகள் தர்ஹா சார்ந்த அனைத்துக் கலாச்சாரத்தையும் எதிர்க்கிறார்கள்.



மாந்திரிக நம்பிக்கை, தத்துவார்த்த பின்புலம், இறைநேசச் செல்வர்களின் வரலாற்றுப் பதிவு. மதநல்லிணக்கம், நாட்டார் தரவுகள் என்பன போன்ற கோணத்தில் பாமரமக்கள் தர்ஹா சார்ந்த கலாச்சாரத்தைச் சிக்கென்று பிடித்துள்ளார்கள்.

தர்ஹாக்களைச் சுற்றியுள்ள கதைகளும், நம்பிக்கைகளும், சடங்கு, சம்பிரதாயங்களும் ஒருவித இஸ்லாமிய நாட்டார் வழக்காறுகள்தான். தர்ஹாக்களைக் கேலி செய்து இஸ்லாமிய கதை சொல்லிகள் படைத்து உலவ விட்டிருக்கிற வாய்மொழிக்கதைகளையும் இங்கே பதிவு செய்ய வேண்டியது என் கடமையாக இருக்கிறது. இத்தகைய கதைகள் தர்ஹாக்களைக் கேலி செய்தாலும் முக்கியமாக நகைச்சுவை உணர்வுக்காகவே இக் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கருதலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் உள்ள வடகரை என்ற கிராமத்தில் வசிக்கும் அப்துல் ஜப்பார் என்ற கதைசொல்லி கூறிய சொல்கதையை இனிப் பார்ப்போம்.

இந்தக் கதையின் பெயர், ‘ஒண்ணேமுக்கா தையன்னா ஒலியுல்லா தர்ஹாவின் கதை’ என்பதாகும். புரியாத இந்தக் கதையின் தலைப்பிற்கு பிறகு விளக்கம் சொல்கிறேன். முதலில் கதையைக் கேளுங்கள்.

ஒரு ஊரில் ஒரு வணிகர் இருந்தார். அவர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். உள்ளூரில் விளையும் பொருட்களை, வாங்கி, அதை ஒரு கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அக்கோவேறு கழுதையை வெகு தொலைவில் உள்ள சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்று சரக்குகளைச் சந்தையில் விற்று அதிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு தன் காலஜீவனத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்.

நாளாக, நாளாக, வணிகத்தில் லாபமே கிடைக்கவில்லை. பலநேரம் பொருள்களை, வாங்கிய விலைக்கே விற்கவேண்டிய நிலை வந்தது. சிலநேரம் நஷ்டத்திற்கும் விற்க வேண்டியதிருந்தது. இதனால் அந்த வணிகனின் மனம் மிகவும் சோர்வுற்றது.

நஷ்டத்தில் எத்தனை நாட்கள் வியாபாரம் செய்ய முடியும்? வணிகருக்கு வேறு தொழிலும் தெரியாது. எனவே தனக்குத் தெரிந்த வாணிபத்தை விடாமல் செய்துகொண்டே இருந்தார். ஒரு நாள் கோவேறு கழுதையின் முதுகில் சரக்குகளை ஏற்றி அதை சந்தைக்கு ஓட்டிக் கொண்டு சென்றார்.

காலைமுதல் நண்பகல் வரை கோவேறு கழுதையின் பின்னால் நடந்து வந்ததால் வணிகர் களைப்படைந்தார். அக் கழுதைக்கும் தண்ணீர்தாகம் எடுத்தது. கழுதையால் வாய் திறந்து பேச முடியவில்லை. என்றாலும் கழுதை மிகவும் வருத்தத்துடன் வணிகரை ஏறிட்டுப் பார்த்தது.

களைப்படைந்த வணிகரும் கோவேறு கழுதையின் முகக்குறிப்பைப் பார்த்து, அதன் மேல் இரக்கம் கொண்டு, பாதை ஓரமாக இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் கோவேறு கழுதையை நிறுத்தி, அதன் முதுகில் இருந்த பொதியைக் கீழே இறக்கி வைத்தார்.

அந்த ஆலமரத்தின் பக்கத்தில் ஒரு சிற்றோடை இருந்தது. அதில் ‘சலசல’ என்று தெளிந்த, குளிர்ந்த தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பொதியைத் தன் முதுகில் இருந்து வணிகன் இறக்கியதால் ஆசுவாசப்பட்ட கோவேறு கழுதை, சிற்றோடையில் இறங்கித் தாகம் தீருமட்டும் தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து ஆலமரத்தின் அடியில் படுத்துவிட்டது.

வணிகரும் வழிநடைக் களைப்பில் கண்ணயர்ந்து ஆலமரத்தின் அடியில் படுத்து நன்றாக உறங்கிவிட்டார்.

வணிகர் கண் விழித்துப் பார்த்தபோது, கழுதை மயங்கிக் கிடந்தது. கழுதை படுத்துக் கிடந்த இடத்தில் அதை எந்த விஷ ஜந்து கடித்ததோ. . . நேரமாக, நேரமாக கோவேறு கழுதையின் நிலைமை மிகவும் மோசமானது.

வழிப்போக்கர்களும் கைப்பக்குவமாகச் சில மருந்துகளைக் கொடுத்தார்கள். ஒன்றும் பயன் இல்லை. அந்திக் கருக்கலில் கோவேறு கழுதை தன் இன்னுயிரைத் துறந்துவிட்டது.

இத்தனை காலமாக தனக்காக உழைத்த அந்த கோவேறு கழுதையின் பிணத்தை அந்த இடத்தில் நாய், நரி தின்னும்படியாக விட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை வணிகருக்கு.

அந்த வழியாகச் சென்ற சில வழிப்போக்கர்களின் கையில் மண்வெட்டி, கம்பி முதலிய கருவிகள் இருந்தன. வணிகர் அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து கெஞ்சிக் கூத்தாடி, ‘இந்த ஆலமரத்தின் அடியில் ஒரு குழியை வெட்டி இந்தக் கோவேறு கழுதையை (கோவேறு கழுதையின் சடலத்தை) நல்லடக்கம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். வழிப்போக்கர்களும் வணிகர் கேட்டுக் கொண்டபடி, அந்தக் கோவேறு கழுதையின் சடலத்தை அந்த ஆலமரத்தடியிலேயே நல்லடக்கம் செய்தார்கள்.

கைவசம் இருக்கும் பொதியை எப்படிச் சுமந்துகொண்டு சந்தைக்குச் செல்ல என்று கவலைப்பட்ட வணிகர் கோவேறு கழுதையை அடக்கம் செய்த இடத்திலேயே, தன் கைவசம் இருந்த கட்டுச் சோற்றைச் சாப்பிட்டு, பக்கத்தில் உள்ள நீரோடையில் கைகழுவி தாகம் தீரத் தண்ணீரும் குடித்துவிட்டு ஆலமரத்தடியிலேயே படுத்து உறங்கிவிட்டார்.

அந்த ஆலமரம் ஒரு முக்கியமான பாதையின் ஓரமாக இருந்தது. பகலெல்லாம் பாதசாரிகள் அந்தப் பாதைவழியாகப் போகவும் வரவுமாக இருந்தனர். முக்கியமாகச் சந்தைக்குச் செல்கிறவர்கள் அந்தப் பாதை வழியாகத்தான் செல்லவேண்டும்.

காலையில் எழுந்து கண்விழித்த வணிகர், காலைக் கடன்களை முடிப்பதற்காக வெளியே சென்றார். காலைக்கடன்களை முடித்துவிட்டு, அருகில் இருந்த ஓடைநீரில் ஒலுச் செய்துவிட்டு ஆலமரத்தடிக்கு வந்து வழக்கம்போல் தொழுது இறைவனிடம், தனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்திலிருந்து விடுதலை தருமாறு துவாச்செய்துவிட்டுத் திரும்பிப் பார்த்தார்.

கோவேறு கழுதையை அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் சில நாணயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்தன. சந்தைக்கு வணிகம் செய்யப் போகிற வணிகர்களில் யாராவது சிலர் கோவேறு கழுதையை அடக்கம் செய்த இந்த இடத்தை ‘யாரோ ஒரு மகானை அடக்கம் செய்யப்பட்ட இடம் இது’ என்று நினைத்து அந்த இடத்தில் காணிக்கை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

வணிகர் பார்த்தார். ‘இது ஒரு மூலதனம் இல்லாத தொழிலாக இருக்கிறதே‘ என்று நினைத்து அந்த இடத்திலேயே துண்டை விரித்து உட்கார்ந்துவிட்டார்.

வழிப்போக்கர்களும், சந்தைக்குச் செல்கிற வியாபாரிகளும், போகும்போதும் வரும்போதும் அந்த கோவேறு கழுதையின் அடக்க ஸ்தலத்தின் முன்னால் நாணயங்களைப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

இதற்கிடையில், வியாபாரத்திற்குப் போகிறபோது இந்த அடக்க ஸ்தலத்தில் காணிக்கை செலுத்திவிட்டுச் சென்றால், அன்று நல்ல வியாபாரம் நடக்கும் என்ற வதந்தியும் வியாபாரிகளின் மத்தியில் பரவியது.

வியாபாரிகளுக்கும், அந்த அடக்க ஸ்தலத்தில் காணிக்கை போட்டு விட்டுச் சென்ற நாட்களில் ‘காக்காய் உக்கார பனம்பழம் விழுந்த கதை’யாகக் குருட்டாம் போக்கில் வியாபாரம் நல்லபடியாக நடந்தது. எனவே தனக்கு இன்று வியாபாரம் அதிகமாக நடக்க, இந்த அடக்க ஸ்தலத்தில் அடக்கமாகி இருக்கிற மகான்தான் காரணம் என்று நினைத்து, வியாபாரிகளும், சந்தையில் இருந்து திரும்பும் போதும், காணிக்கையாகச் சில நாணயங்களைப் போட்டுவிட்டுச் சென்றார்கள்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு தன் கோவேறு கழுதையையும் பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது இருந்த வணிகருக்கு, ஆலமரத்தடியில் எந்த முயற்சியும் இன்றி மக்களின் அறியாமையால், மூடப்பழக்கத்தால், காணிக்கையாக வந்து விழும் பணம் நல்ல வருமானமாகப்பட்டது.

நாளடைவில், ஆலமரத்தடியில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடம் புனித ஸ்தலமாகச் சுற்றுவட்டார மக்களால் கருதப்பட்டது.

வணிகருக்கு இது ஒரு நல்ல தொழிலாகப்பட்டது. எனவே அந்த இடத்திலேயே ஒரு கூடாரத்தைப் போட்டுத் தங்க ஆரம்பித்துவிட்டார்.

ஒருநாள் ஒரு வழிப்போக்கர், ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம், "இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மகானின் பெயர் என்ன?" என்று கேட்டார்.

வழிப்போக்கரிடம் "இந்த இடத்தில் ஒரு கழுதையைத்தான் அடக்கம் செய்துஇருக்கிறது" என்று உண்மையைச் சொன்னால் யார் காணிக்கை போடுவார்கள்? ஆனால் அதற்காகப் பொய் சொல்லவும் அவர் விரும்பவில்லை.

தமிழில் ஒன்று என்ற எண் உருவை ‘க’ என்ற எழுத்தாலும், முக்கால் என்ற எண் உருவை ‘ழு’ என்ற எழுத்தாலும் எழுதுவார்கள். எனவே ‘க-ழு-தை-’ என்பதை மறைமுகமாக ஒண்ணே முக்கா தையன்னா’ என்று மாற்றியமைத்து அத்தோடு ‘ஒலியுல்லா’ என்ற பெயரையும் சேர்த்து, ‘இந்த இடத்தில் அடக்கமாகி இருக்கிற மகானின் பெயர் ஒண்ணேமுக்கால் தையன்னா ஒலியுல்லா’ என்று கூறினார்.

அன்றிலிருந்து அந்தப் பெயரும் பிரபல்யமாயிற்று. காலம் செல்லச் செல்ல அந்த இடத்தில் வருமானம் பெருகிற்று. வணிகர் தன் தேவைக்குப்போக மீதிப் பணத்தை அந்த அடக்க ஸ்தலத்தைச் சுற்றிக் கட்டடம் கட்ட ஆரம்பித்தார்.

பொதுமக்களும் தன் பங்கிற்கு நேர்ந்து, போட்டி போட்டுக் கொண்டு, அந்த இடத்தில் பல்வேறு பொருட்களைக் கொண்டு வந்து குவித்தார்கள். கழுதையை அடக்கம் செய்த அந்த இடம் இன்று ஒரு புனித ஸ்தலமாக நம்பிக்கையுள்ள மக்களால் கொண்டாடப்படுகின்றது என்று கதையைச் சொல்லி முடித்தார் தகவலாளர்.

No comments: