கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, July 24, 2013

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்-3 நாட்டார் தரவுகளில் சுதந்திரப் போராட்டச் சுவடுகள்

பாமர மக்களின் படைப்பிலக்கியங்களை வாய்மொழி வரலாறாகப் பார்க்கும் பார்வை. இன்றைக்கு ஆய்வாளர்களிடையே உருவாகி இருக்கிறது. "பாமர மக்களின் படைப்பிலக்கியங்களில் சில, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் வரலாற்றைப் பதிவு செய்துள்ளது" என்ற கூற்றை முதன் முதலில் தமிழகத்தில் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் முன் வைத்தார்கள்.
இவ்வகைப் படைப்பிலக்கியங்களில் கதைப்பாடல்களும் நாட்டார் கதைகளும், மரபுத் தொடர்களும் வாய்மொழிப்பாடல்களும் இன்றைய ஆய்வாளர்களுக்கு, வரலாற்றுச் சான்றாதாரமாகத் திகழ்கின்றன. இவைகளுள் குறிப்பாக நாட்டார் கதைப்பாடல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தன் கருத்துகளை நிறுவ வெகுவாகக் கை கொடுக்கின்றன.
கட்டபொம்மன் கூத்தும், கட்ட பொம்மன் கதைப்பாடலும், வீரபாண்டிய கட்ட மொம்மன் என்ற திரைப்படத்தை உருவாக்க மிகவும் உதவியது. அதே போல் தானாதிபதி பிள்ளை கதைப்பாடலும் இன்று ஆய்வாளர் திரு. மாணிக்கம் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாற்றை அறிந்து கொள்ள 'கான்சாகிப் சண்டை' என்ற கதைப்பாடல் பேராசிரியர் நத்தர் ஷா அவர்களுக்கு மிகவும் உதவி புரிந்துள்ளது. அதே போல் முனைவர் ந. இராசையா அவர்கள் பூலித்தேவனின் வரலாற்றை எழுத பூலித்தேவன் ஓயில் கும்மிப் பாடல், பூலித்தேவன் சிந்து, பூலித்தேவன் கதைப் பாடல் முதலியன மிகவும் உதவிகரமாக இருந்திருக்கின்றன.
வட்டாரம் வாரியாக வாழ்ந்த குறுநில மன்னர்களின் வரலாறுகளைத் தொகுக்கவும். இன்றைக்கு நாட்டார் பாடல்களும், நாட்டார் சொல் கதைகளும்; கதைப் பாடல்களும் மிகவும் உதவுகின்றன.
நெல்கட்டும் செவலைச் சுற்றி உள்ள குகைகளின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும், பாதைகளின் பெயர்களும், குளங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் கூட மாவீரன் பூலித் தேவனின் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லும் சான்றாதாரங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய சில சொற்றொடர்களையும், அத்தொடர்களோடு தொடர்புடைய வரலாற்றுச் செய்திகளையும் இனிப் பார்ப்போம்.
வாசு தேவ நல்லூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குகையின் பெயர். பூலித்தேவர் குகை என்பதாகும். ஆங்கிலேயருடன் பூலித்தேவன் யுத்தம் செய்த காலத்தில் ஆங்கிலேயரின் படைகளை மறைந்திருந்து தாக்க, பூலித்தேவர், தன் படைகளுடன், இந்த இடத்தில் தங்கி இருந்தார். எனவேதான் இக்குகைக்கு பூலித்தேவர் குகை என்று பெயர் வந்தது என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு ஊரை விட்டு வெகு தூரம் விலகி உள்ள இக்குகைக்கு அருகில் உள்ளபாறை ஒன்றின் பெயர், 'சோறூட்டும் பாறை' என்பதாகும். "பாறை எப்படிச் சோறூட்டும்?” என்று இப்பகுதி மக்களிடம் விசாரித்த போது பூலித்தேவனோடு தொடர்புடைய , ஒரு செய்தியை இப்பகுதியில் வாழும் மக்கள் சொன்னார்கள்.
பூலித்தேவரும், அவரது படையைச் சேர்ந்த போர் வீரர்களும், இக்குகையில் வாழ்ந்தபோது பகலெல்லாம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இரவில் அடுப்பு அமைத்துத் தீமூட்டிச் சமையல் செய்தால் அத்தீயின் வெளிச்சம் எதிரிகளுக்கு, படைவீரர்கள் மறைமுகமாகத் தங்கி இருக்கும் இடத்தைக்காட்டிக் கொடுத்து விடும் என நினைத்து பாறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்களில் வாழ்கின்ற மக்களிடம், இன்ன இன்ன கிழமையில், இன்ன இன்ன ஊரில் வாழ்கின்ற மக்கள், சோறு சமைத்தும் குழம்பு வைத்தும், கரு, கரு என்று பொழுது மயங்கிய கருக்கல் நேரத்தில், சோற்றை, பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் தட்டியும், குழம்பை அந்த நார்ப்பெட்டியின் மேல் மண் சட்டிகளில் வைத்தும், குறிப்பிட்ட ஒரு பாறையின் மேல் வைத்துவிட வேண்டும் என்று மன்னர் பூலித்தேவர் உத்தரவிட்டிருந்தார்.
மன்னரின் உத்தரவுப்படியே, அப்பகுதி மக்களும், பகலெல்லாம் சமையல் செய்து, அந்திக் கருக்கல் நேரத்தில், சோற்றைப் பெரிய, பெரிய நார்ப்பெட்டிகளில் போட்டும், அதற்கு ஏற்ப குழம்பு கூட்டு முதலியவற்றை, பெரிய பெரிய மண்சட்டிகளில் ஊற்றியும் சுமந்து கொண்டு போய், குறிப்பிட்ட அப்பாறையின் மேல் வைத்துவிடுவார்கள். பொழுது இருட்டும் வரை, ஊர்க்காரர்களில் ஒன்றிரண்டு பேர், அச்சோற்றுக்குக் காவலும் இருப்பார்கள், காட்டில் வாழும் நரி, கரடி முதலிய மிருகங்கள் அச்சோற்றையோ, குழம்பையோ, கொட்டிவிடாமல் இருப்பதற்காக. பொழுது இருட்டிய பிறகு குகையில் தலைமறைவாகத் தங்கி இருக்கும். படை வீரர்களில் சிலர் வந்து பாறையின் மேல் ஊர் மக்களால் சமையல் செய்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றையும் குழம்பையும் தூக்கிக் கொண்டு செல்வார்களாம்.
சோற்றுக்குக் காவலிருக்கும் ஆட்கள் தான் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலியவைகளையும் படைவீரர்களிடம் கொடுத்து அனுப்புவார்களாம். இப்படியாக தலைமறைவாக வாழ்ந்து ஆயுதப்பயிற்சி பெற்ற பூலித்தேவருக்கும், அவரின் படை வீரர்களுக்கும், தேவையான, சாப்பாடும், தாம்பூலமும் வெற்றிலை, பாக்கு முதலியவை இப்பாறையின் வாயிலாக ஊர் மக்களிடம் இருந்து சென்றது. எனவே இப்பாறையை இன்றும் இப்பகுதி மக்கள் "சோறு ஊட்டும் பாறை" என்ற பொருத்தமான பெயரால் அழைக்கின்றார்கள்.
நெற்கட்டான் செவ்வலுக்குத் தென்புறமும் பெரிய 'மேடு' போன்ற ஒரு பகுதி உள்ளது. அந்த இடத்தை, மக்கள் 'கான்சா மேடு' என்று அழைக்கின்றார்கள். ஏன் அப்பகுதிக்கு அப்பெயர் வந்தது என்று விசாரித்த போது; இந்த இடத்தில்தான் கான்சாகிப் சுமார் பதினெட்டு பவுண்டு எடையுள்ள பீரங்கிகளை அமைத்து, நெற்கட்டுஞ் செவல் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். எனவே தான் இப்பகுதிக்கு, 'கான்சா மேடு' என்ற பெயர் வந்தது என்றார்கள்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான கொல்லங் கொண்டான் ஜமீனைச் சேர்ந்த வாண்டாயத் தேவன், பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தாள் தேவைப்பிள்ளையைக் கருவில் சுமந்திருந்தாள்.
போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம், அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும். தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். எனவே, தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன்மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார்.
இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார்.
எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.
அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பில் பஞ்சைப் பதாரி போல், ஏழைய, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் 'பஞ்சம் பட்டி' என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.
கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன்.
ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன். அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார். வாண்டாயத் தேவர் அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்; மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.
பூலித்தேவர் காலத்தில் இருந்து சிவகிரி உள்ளிட்ட தென்பகுதி பாளையக்காரர்கள் மேல் படை எடுத்து வர மருதநாயகம் என்ற கொமந்தான் கான்சாகிப், ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள், திருவில்லிபுத்தூர் கோட்டையைத்தான் ஒரு நுழைவு வாயிலாகப் பயன்படுத்தினார்கள். எனவே இன்றும் திருவில்லிபுத்தூரில் உள்ள அக்கோட்டை 'தலைவாசல்' என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இக்கோட்டையைச் சுற்றிலும் உள்ள, கொம்மந்தான்புரம், மம்சாபுரம், கான்சா புரம் என்ற ஊரின் பெயர்கள், கொமந்தான்புரம் என்ற கான்சாகிப் என்ற முகம்மது யூசுப் கான் என்ற மருத நாயகம் இப்பகுதியில் படை எடுத்து வந்தபோது முகாமிட்டுத் தங்கி இருந்த காரணத்தால் சூட்டப் பட்டது என்று இப்பகுதியில் வாழும் தகவலாளர்கள் கூறுகின்றார்கள்.
பூலித்தேவர் படையின் தளபதியாக இருந்தார் 'பெரிய காலாடி' என்பவர். இவர் தேவந்திரகுல வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்த செய்தியை அறிந்த பெரிய காலடி சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார். அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் என்றாலும் வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்தநிலையிலும், தான் தலைப் பாகையாகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி, தன் வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு, தன் உயிர் போகும் வரை கடலாக எதிரிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார். தன் தளபதி பெரிய கடலாடி எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த இடத்தில், பிற்காலத்தில் பூலித்தேவர், வீரக்கல் (நடுகல்) ஒன்றை நட்டு வைத்தாராம். அந்த இடம் இன்றும் இப்பகுதி மக்களால் 'காலாடி மேடு' என்று அழைக்கப்படுகிறது.
பூலித் தேவன் சிந்தும், காலாடியின் புகழை,
"கடமை வீரனப்பா; காலாடி வீரனப்பா
சூராதி சூரனப்பா; சூழ்ச்சியில் வல்லவனப்பா"
என்று பேசுகிறது.
நாட்டுப் புறப்பாடல்களிலும், நாட்டுப்புறக்கதைப் பாடல்களிலும் தேடினால் நம் நாட்டு விளிம்பு நிலை மக்கள் வீரதீரத்துடன் எப்படி எல்லாம் நம் நாட்டின் விடுதலைக்காக உழைத்தார்கள் என்ற செய்திகளை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பூலித்தேவன் கும்மிப் பாடல், "ஒண்டிவீரன் என்ற பூலித் தேவனின் தளபதி. தனி ஆளாகச் சென்று வெள்ளையர்களுக்கு எதிராக வீரதீரச் செயல்களைப் புரிந்து, கடைசியில் தானே தன் கையை வெட்டிக் கொண்டு செத்தான்" என்ற வரலாற்றைச் சொல்கிறது.
பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, கும்பினியர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். கும்பினியர், புலீத் தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும்போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தார்கள்.
பரங்கியர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர் கொள்வதுதான் அன்றைக்கு வெள்ளையர்களை எதிர்த்து யுத்தம் செய்யும் பாளைக்காரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே, வெள்ளையர்கள் தமிழ் வீரமறவர்களை அழித்து ஒழிக்கப் பயன்படுத்தும், பீரங்கியையே பரங்கிப் படைகளுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்தார் பூலித்தேவர். அப்பணியைச் செய்வதற்குச் சரியான ஆள் ஒண்டிவீரன்தான் என்று முடிவு செய்து, பரங்கியரின் முகாமிற்கு ஒண்டி வீரரை அனுப்பி வைத்தார் பூலித்தேவர்.
இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள பரங்கியரின் முகாமிற்குச் சென்றான் ஒண்டி வீரன்.
கும்பினிப் படைவீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் ஒண்டி வீரன் பதுங்கிக் கிடந்தான். தான் பதுங்கி இருப்பதைப் பரங்கிப் படையினர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளையும், செத்தல் செருவில்களையும் தானே அள்ளிப் போட்டுக் கொண்டு படுத்துக் கிடந்தான்.
அப்போது அங்கு வந்த கும்பினிப்படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஆப்பு ஒன்றைத் தரையில் அறைந்தான் பரங்கி வீரன், இருட்டில் ஆப்பை வைத்துச் சம்மட்டியால் அறைந்த இடம் ஒண்டி வீரனின் புறங்கையாக இருந்தது. பரங்கி வீரன் அடித்த ஆப்பு ஒண்டி வீரனின் கையைத் துழைத்துக் கொண்டு, இரத்தக் கசிவுடன், பூமிக்குள் பாய்ந்தது.
ஒரு ஊசி குத்தினாலே தன்னை அறியாமல், நாம் சத்தம் போட்டுவிடுகிறோம். ஆனால், ஏசு நாதரை, உயிரோடு வைத்துச் சிலுவையில் அறைந்ததைப் போல், வெள்ளைப் பரங்கி வீரன், ஒண்டி வீரனின் கை மேல் ஆப்பை வைத்து அறைந்தான். இப்போது, லேசாகச் சத்தம் கொடுத்தாலும், பீரங்கிப் படை வீரன் தன்னைக் கண்டுபிடித்துவிடுவான். கண்டுபிடித்தால் கொன்று விடுவான் என்பது நிச்சயம், ஆனால் மன்னர் பூலித்தேவன் தன்னிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய முடியாமல் சாக வேண்டிய நிலைவரும் என்று எண்ணிய ஒண்டி வீரன் பல்லைக் கடித்துக் கொண்டு, ஆப்பு தன் கையைத் துளைக்கும் போது ஏற்பட்ட வலியைப் பொறுத்துக்கொண்டான்.
ஆப்பை ஒண்டி வீரனின் கையோடு சேர்த்து தரையில் அறைந்த வெள்ளையன் அந்த ஆப்பில் ஒரு குதிரையைப் பிடித்துக் கயிற்றால் கட்டி விட்டுத் தன் முகாமிற்குச் சென்றுவிட்டான்.
இப்போது ஆப்பில் இருந்து தன் கையை விடுவிக்க வேண்டும், என்ன செய்ய? மறுகையில் ஆப்பை அசைத்துப் பிடுங்கலாம் என்றால் ஆப்பு பூமியில் ஆழமாகப் புதைந்து உள்ளது. ஆப்பை அசைத்தால், புண்ணான அவனது இடது கை மேலும் வலிக்கும். எனவே வலது கையால், தன் இடுப்பில் சொறுகி இருந்த வாளை உருவி தன் இடது கையை முட்டுக்குக் கீழே, தானே ஓங்கி வெட்டுகிறான் ஒண்டி வீரன்.
தன் கையைத் தானே ஒரே வெட்டில் வெட்டித் துண்டாக்கினால் எப்படி வலித்திருக்கும் என்பதை இந்த இடத்தில் வாசகர்கள் எண்ணிப் பார்த்துக் கொள்ளவும். இப்போதும் வலியால் சத்தம் கொடுத்தால், பரங்கிப் படை வீரர்கள், அவனைப் பிடித்துக்கொள்வார்கள். மன்னர் கொடுத்த வேலையைச் செய்து முடிக்க முடியாது போகலாம். எனவே, தானே தன் கையை வெட்டிய வலியையும் தாங்கிக் கொண்டு ஒண்டி வீரன். உதிரம் ஒழுகும் கையோடு, மெல்ல, மெல்ல, ஊர்ந்து பரங்கிப் படையினர் பீரங்கியை வைத்திருக்கும் இடத்திற்குப் பதுங்கிச் சென்று அப்பீரங்கியின் வாயை கும்பினியரின் படைகள் தங்கி இருக்கும். திசையை நோக்கிச் சரியாகத் திருப்பி வைத்து, அப்பீரங்கியை வெடிக்கச் செய்துவிட்டு, கும்பினியனின் குதிரை ஒன்றில் ஏறி, அங்கிருந்து தப்பித்து வரும் ஒண்டி வீரன்- "என் அங்கக்கை போனால் என்ன- எனக்குத் தங்கக்கை தருவான் பூலிமன்னன்" என்று பாடிக் கொண்டே வந்ததாக பூலித் தேவன் கும்மிப்பாடல் குறிப்பிடுகிறது.
தான் செய்த தவறுக்காக, தன் கையையே வெட்டிக் கொண்டு, தன் சொந்தக் கைக்குப் பதில் பொன்னாலாகிய கையைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்த பொற்கைப் பாண்டியனை நாம் வரலாற்றின் ஏடுகளில் வாசித்திருக்கிறோம்.
இங்கே, நாட்டுக்காக, தேச விடுதலைக்காக, "தன் மன்னன் கொடுத்த பணியை, உயிரைக் கொடுத்தேனும் கனகச்சிதமாய்ச் செய்து முடிக்க வேண்டும்" என்று செயல் பட்டு தன் இடது கையைத் தானே துண்டித்துக்கொண்ட ஒரு மாவீரனை நாட்டார் பாடல்களில் நாம் தரிசிக்கின்றோம்.
பொற்கைப்பாண்டியன் மன்னன், அவனுக்கு உடனே வைத்திய உதவி கிடைத்திருக்கும். பொன்னால் கை செய்து பொருத்திக்கொள்ளவும் முடிந்திருக்கும். ஆனால், அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இந்தச் சுதந்திரப் போராட்ட வீரன், தனக்கும் 'தங்கக்கை' கிடைக்கும் என்ற கனவுடன், இருளில் குதிரையில் வந்தவனுக்கு, அளவுக்கு அதிகமான உதிரப் போக்கு ஏற்பட்டு மரணம்தான் பரிசாகக் கிடைத்தது. இந்தச் சுதந்திரப் போராட்ட வீரனைத்தான் முதல் தற்கொலைப்படை வீரன் என்று சொல்லலாம். வரலாற்றின் ஏடுகள் பதிவு செய்ய மறந்த அல்லது மறுத்த ஒண்டி வீரனைப் போன்ற பலவீரர்களின் வீரதீரச் செயல்களை நாட்டுப் புற வாய்மொழி மரபுகள்தான் பதிவு செய்துள்ளன.

No comments: